‘புரெவி’ புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் கடல் கடும் சீற்றம்; 4 படகுகள் தண்ணீரில் மூழ்கின

‘புரெவி’ புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் நேற்று கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் நாகை கடுவையாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4 படகுகள் தண்ணீரில் மூழ்கின.
‘புரெவி’ புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் கடல் கடும் சீற்றம்; 4 படகுகள் தண்ணீரில் மூழ்கின
Published on

நாகப்பட்டினம்,

நிவர் புயல் எச்சரிக்கையின் காரணமாக நாகை மாவட்டத்தில் 1,500 விசைப்படகுகள் கடந்த 23-ந் தேதி முதல் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. பைபர் படகுகளில் மட்டும் மீனவர்கள் 3 நாட்டிக்கல் மைல் தூரத்திற்கு சென்று மீன்பிடித்து வந்தனர். இந்த நிலையில் புதிதாக உருவாகி உள்ள புரெவி புயல் எச்சரிக்கை காரணமாக நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்ய தொடங்கிய மழை நேற்று பகல் பொழுது முழுவதும் கொட்டி தீர்த்தது.

தொடர் மழை காரணமாக, நாகை, நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட கடலோர பகுதி கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மேலும் புதிதாக உருவாகியுள்ள புரெவி புயல் எச்சரிக்கையை தொடர்ந்து நாகை துறைமுகத்தில் நேற்று 2-வது நாளாக 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கடல் கடும் சீற்றம்; 4 படகுகள் மூழ்கின

இதனிடையே புயல் சின்னம் வலுவடைந்து வருவதன் காரணமாக நாகை மாவட்டத்தில் நேற்று கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் அலைகள் துறைமுகம் மற்றும் கடற்கரையோரம் கொட்டப்பட்டுள்ள கருங்கல் தடுப்பு சுவர்களை தாண்டி 5 அடி உயரத்திற்கு மேல் எழுந்து வருவதால் மீனவர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. புயல் காரணமாக மாவட்டத்தில் 1500 விசைப்படகுகள், 7ஆயிரம் பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

விடாமல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் நாகை அக்கரைப்பேட்டை துறைமுகம் கடுவையாற்றில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அக்கரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த வெற்றிச்செல்வன், பாலகிருஷ்ணன், கீச்சாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த செல்வம் ஆகியோருக்கு சொந்தமான 3 பைபர் படகுகளும், ஒரு நாட்டு படகும் கடுவையாற்றில் மூழ்கின. இதனையடுத்து மீனவர்கள் அந்த படகுகளில் தேங்கிய மழைநீரை மோட்டார் என்ஜின் மூலம் அகற்றி படகை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

தரங்கம்பாடியிலும் கடல் சீற்றம்

நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, பொறையாறு, சங்கரன்பந்தல், செம்பனார்கோவில், பரசலூர், கிடாரங்கொண்டான், உள்ளிட்ட தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் விட்டு, விட்டு பலத்தமழை பெய்தது, தரங்கம்பாடி, சந்திரபாடி, சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளகோவில், பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, தாழம்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு ஆகிய பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டது. புயல் எச்சரிக்கை காரணமாக இந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

வேதாரண்யம்

வேதாரண்யம் தாலுகாவில் உள்ள ஆதனூர், கருப்பம்புலம், பஞ்சநதிக்குளம், தென்னம்புலம், நெய்விளக்கு, செம்போடை, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்தது. சில பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த மழை மானாவாரி சம்பா சாகுபடிக்கு நல்ல மழை என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே வேளையில் பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து வந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

புயல் எச்சரிக்கை காரணமாக வேதாரண்யம் தாலுகாவில் உள்ள கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வானவன்மகாதேவி, வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் நேற்று 2-வது நாளாக 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்கள் தங்கள் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்து விட்டு வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். வேதாரண்யம் மானாவாரி பகுதியில் 10 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா சாகுபடிக்கு இந்த மழை ஏற்றதாக உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

திருவெண்காடு

பூம்புகார், திருவெண்காடு, சீர்காழி, கொள்ளிடம், செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை பெய்தது. பூம்புகார், வானகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது.

பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் புரெவி புயலின் காரணமாக 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. கடந்த 2 வார காலமாக பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு மீனவர்கள் செல்லவில்லை. வானகிரியை சேர்ந்த செந்தில் என்பவரது விசைப்படகு பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் பலத்த காற்றின் காரணமாக கடந்த 30-ந் தேதி கடலில் மூழ்கியது.

பலத்த மழையால் அந்த விசை படகை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனிடையே நேற்று இரு கிராம மீனவர்களும் குறுகிய படகை மீட்க நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் நேற்று பெய்த கனமழையால் மீட்பு பணி தொடங்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com