தனியார் சர்க்கரை ஆலையின் சேமிப்பு கிடங்கிற்கு சீல் - அதிகாரிகள் நடவடிக்கை

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையை வழங்காததால் திருமண்டங்குடியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையின் சேமிப்பு கிடங்கிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தனியார் சர்க்கரை ஆலையின் சேமிப்பு கிடங்கிற்கு சீல் - அதிகாரிகள் நடவடிக்கை
Published on

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி கிராமத்தில் தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலை நிர்வாகம், கரும்பு விவசாயிகளுக்கு ரூ.30 கோடியே 76 லட்சம் நிலுவை தொகை வழங்க வேண்டி உள்ளது. இதை வழங்க கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் ஆலை நிர்வாகம் நிலுவை தொகையை வழங்கவில்லை. இந்த நிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்குவது குறித்து ஆலை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி பாபநாசம் தாசில்தார் மாணிக்கராஜ், மண்டல துணை தாசில்தார் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் ஜெயமதி, கிராம நிர்வாக அதிகாரிகள் ராஜ்குமார், சதீஷ் ஆகியோர் ஆலை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து முதல் கட்டமாக ஆலையில் உள்ள சர்க்கரை சேமிப்பு கிடங்கிற்கு சீல் வைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று அதிகாரிகள் கிடங்கை பூட்டி சீல் வைத்தனர்.

அந்த கிடங்கில் 29 ஆயிரத்து 134 சர்க்கரை முட்டைகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தரவிமல்நாதன் நிருபர்களிடம் கூறியதாவது:- விவசாயிகளிடம் இருந்து வாங்கிய கரும்புக்கான தொகையை ஆலை நிர்வாகம் வழங்காமல் தாமதம் செய்து வந்தது. இதுதொடர்பாக பல போராட்டங்களை நடத்திய பின்னரும் ஆலை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. தமிழகத்தின் தலைமை செயலாளரிடம் மனு அளித்ததன் பேரில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. ஆலையின் அசையா சொத்துகள் அனைத்தையும் விற்பனை செய்து விவசாயிகளுக்கு நிலுவையை தொகையை வழங்க வேண்டும் இவ்வாறு அவர் கூறி னார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com