தர்மபுரி, பாலக்கோட்டில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 7 கடைகளுக்கு ‘சீல்’

தர்மபுரி மற்றும் பாலக்கோட்டில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 7 கடைகளை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
தர்மபுரி, பாலக்கோட்டில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 7 கடைகளுக்கு ‘சீல்’
Published on

தர்மபுரி,

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாட்டில் சில தளர்வுகளை நேற்று முதல் அமல்படுத்தியது. இதன்காரணமாக தர்மபுரி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தளர்வின்படி அனுமதிக்கப்பட்டவற்றில் பல கடைகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் தர்மபுரி நகரில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

அப்போது சில கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தர்மபுரி பஸ்நிலையம் அருகே ஒரு செல்போன் விற்பனை கடை, ஒரு மருந்து கடை ஆகியவற்றிற்கு தாசில்தார் சுகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் ஆகியோர் சீல் வைத்தனர். இதேபோல் உரிய அனுமதியின்றியும் விதிமுறையை மீறியும் திறக்கப்பட்ட ஒரு ஜவுளி கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.

இதேபோல் தர்மபுரி உதவி கலெக்டர் தேன்மொழி தலைமையில் பாலக்கோடு தாசில்தார் ராஜா மற்றும் அதிகாரிகள் குழுவினர் பாலக்கோடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 மளிகை கடைகள் மற்றும் 2 பேக்கரி கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொதுமக்கள் கூட்டமாக பொருட்கள் வாங்க திரண்டது தெரியவந்தது.

அந்த கடைகளில் முககவசங்கள் அணியாமல் பொருட்கள் வினியோகம் நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த 4 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தர்மபுரி, பாலக்கோட்டில் மொத்தம் 7 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com