

பல்லடம்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. திருப்பூர் மாவட்டத்திலும் இதுவரை 114 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 109 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இருப்பினும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறி, பால் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை (புதன்கிழமை) முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு எந்தெந்த கடைகள் திறக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை பல்லடம் பஸ் நிலையம் எதிரே உள்ள சுப்ரீம் மொபைல்ஸ் விற்பனை கடையும், பல்லடம் அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள லட்சுமி ஆடியோஸ் எலெக்ட்ரானிக்ஸ் கடையும் ஊரடங்கு விதிமுறைகளை மீறியும் சமூக இடைவெளி ஏற்பாடுகள் செய்யாமலும் திறக்கப்பட்டது. இதனை அறிந்த பல்லடம் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று எச்சரிக்கை செய்து விட்டு சென்றனர். ஆனால் அவர்கள் கடைகளை மூடவில்லை.
பின்னர் நகராட்சி ஆணையாளர் கணேசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் பல்லடம் நகர பகுதியில் திடீர் ஆய்வுக்கு சென்றனர். அப்போது மேற்கண்ட கடைகள் ஊரடங்கு விதிமுறைகளை மீறி, சமூக இடைவெளி ஏற்பாடுகள் செய்யாமல் திறக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த கடைகளை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர். இது போல் பல்லடம் பனப்பாளையம் பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட சந்தோஷ் ஸ்னாக்ஸ் என்ற சிப்ஸ் கடையும் சீல் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவினாசி வடக்கு ரதவீதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி கே.வி.எம். எலக்ட்ரானிக்ஸ், பேன்சி கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தங்கம் அவினாசி பேரூராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி மற்றும் அலுவலர்கள் விரைந்து வந்து, விதிமீறலாக கடையை திறந்து சமூக இடைவெளியை பின்பற்றாமல் வியாபாரம் செய்த அந்த 2 கடைகளையும் போலீசார் முன்னிலையில் பூட்டி சீல் வைத்தனர். இந்த சம்பவம் அவினாசியில் பரபரப்பை ஏற்படுத்தியது.