மலைக்கோட்டை பகுதியில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட வணிக வளாக கட்டிடத்துக்கு ‘சீல்’; மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

திருச்சி மலைக்கோட்டை பகுதியில், அனுமதி பெறாமல் கட்டப்பட்ட வணிக வளாக கட்டிடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்‘ வைத்தனர்.
வணிக வளாகத்தில் செயல்பட்ட கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்த போது எடுத்த படம்
வணிக வளாகத்தில் செயல்பட்ட கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்த போது எடுத்த படம்
Published on

அனுமதியின்றிகட்டப்பட்ட கட்டிடம்

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் பகுதியில் உள்ள நந்தி கோவில் தெருவில், பாலக்கரையை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது.

இந்த கட்டிடத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியும் மற்றும் சிவம் ரெடிமேட்ஸ், திருமலை கோல்டு கவரிங் மற்றும் ஆர்த்தி புட்வேர் ஆகிய 3 கடைகளும் செயல்பட்டு வந்தன. இந்த கட்டிடம் மாநகராட்சி விதிமுறைகளுக்கு புறம்பாக கட்டப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

கோர்ட்டு உத்தரவின்பேரில், விதிமுறைக்கு புறம்பாகவும், மாநகராட்சி அனுமதியின்றி கட்டப்பட்ட சம்பந்தப்பட்ட வணிக வளாக கட்டிட உரிமையாளருக்கும், கடைகளின் வாடகைதாரர்களுக்கும் மாநகராட்சி சார்பில் கடந்த மாதம் 18-ந் தேதி நோட்டீஸ் வழங்கப்பட்டது.

கட்டிடத்துக்கு சீல்

இந்தநிலையில், திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட உதவி ஆணையர் திருஞானம் தலைமையில் நிர்வாக பொறியாளர் சிவபாதம் மற்றும் அதிகாரிகள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட வணிக வளாக கட்டிடத்தை பூட்டி சீல் வைப்பதற்காக சென்றனர். பின்னர், மாநகராட்சி அதிகாரிகளுடன், வருவாய் துறை அதிகாரிகளும் அங்கு செயல்பட்டு வந்த வங்கியை தவிர மற்ற கடைகளில் இருந்தவர்களை வெளியேற்றி விட்டு 3 கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர்.

பின்னர் அந்த கடைகளில் கோர்ட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இந்த சம்பவத்தால் நேற்று தெப்பக்குளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com