முக கவசம், கிருமிநாசினி, கைகழுவும் திரவம் போன்றவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் கடைகளுக்கு ‘சீல்’ ; கலெக்டர் எச்சரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் முக கவசம், கிருமிநாசினி, கைகழுவும் திரவம் போன்றவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என கலெக்டர் உமா மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
முக கவசம், கிருமிநாசினி, கைகழுவும் திரவம் போன்றவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் கடைகளுக்கு ‘சீல்’ ; கலெக்டர் எச்சரிக்கை
Published on

புதுக்கோட்டை,

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் புதுக்கோட்டையில் உள்ள அம்மா உணவகம், தனியார் பல்பொருள் அங்காடி மற்றும் தனியார் விடுதியில் மேற்கொள்ளப்பட்டு உள்ள கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் உமா மகேஸ்வரி ஆய்வு செய்தார்.

அப்போது பொது மக்களுக்கு கைகழுவுவதற்கு ஏற் படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், நோய் தடுப்பு நட வடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன், தாசில்தார் முருகப்பன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர். தொடர்ந்து கலெக்டர் உமா மகேஸ்வரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இதுவரை 217 பேர் சீனாவில் இருந்து வந்து உள்ளனர். அவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

புதுக்கோட்டை நகர் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. முக கவசம், கிருமிநாசினி, கைகழுவும் திரவம் போன்றவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்படும். விற்பனை, அதிக அளவில் பணியாற்றும் தொழிற்சாலைகளை மூடுவது குறித்த முடிவு இன்னும் எடுக்கவில்லை. அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் பொதுமக்களின் கூட்டத்தை தவிர்க்க அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. இது சம்பந்தமாக வணிகர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு அடுத்த கட்ட முடிவு அறிவிக்கப்படும்.

கொரோனா பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் தங்களது சந்தேகங்களை தெளிவுபடுத்தி கொள்ள புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் அவசர கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டு உள்ளது, பொதுமக்கள் 04322222207 என்ற இலவச எண்ணிற்கு அழைத்து தங்களது சந்தேகங்கள் மற்றும் அய்யப்பாடுகளை போக்கி கொள்ளலாம். சுயஉதவிக்குழுக்கள் மூலம் கைகழுவுவதற்கான கிருமி நாசினிகள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டு அதனை தயார் செய்து குறைந்த விலையில் பொது மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் வேலைக்கு வருவதற்கு முன்னும், இடைவேளை நேரங்கள், உணவு இடைவேளை மற்றும் வேலை முடித்து செல்லும் போதும் கைகழுவுதற்கான திரவங்கள் கொண்டு கைகழுவுவதற்குரிய ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com