

கீரனூர்
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தனிப்பிரிவு போலீசார் கீரனூர் கடைவீதியில் சோதனை நடத்தினர். அப்போது வடக்கு ரதவீதியில் விஜய்சிங்(வயது 50) நடத்தி வரும் மளிகை கடையில் 15 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல, பஸ் நிலையம் அருகே கடை நடத்தி வரும் மரியவினோத் குமார்(35) என்பவர் கடையில் சோதனை மேற்கொண்டபோது அங்கு 8 மூட்டைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
2 பேர் கைது
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 350 கிலோ இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பின்னர் 2 பேரையும் கைது செய்த கீரனூர் போலீசார் அவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் கீரனூர் கோர்ட்டில் ஒப்படைத்தனர். கீரனூர் பகுதியில் மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் வியாபாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.