

விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் கிளியனூரை அடுத்த நல்லாவூர்புதூர் அருகே வானூர் சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அதிகாரி அம்பிகா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அவர்கள் வைத்திருந்த பையில் ரூ.1 லட்சத்து 82 ஆயிரத்து 640 ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள், புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 28), நோணாங்குப்பம் சிவலிங்கம் (20) என்பது தெரிந்தது.
மேலும் அவர்கள், தாங்கள் இருவரும் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், பொதுமக்களிடம் இருந்து கடன் தொகையை வசூலித்து வருவதாகவும் கூறினர். இருப்பினும் உரிய ஆவணம் ஏதும் அவர்களிடம் இல்லாததால் அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வானூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.