

திருச்சி,
திருச்சியில் இ-பதிவு இல்லாமல் சாலையில் உலா வந்தவர்களின் வாகனங்களை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.
இ-பதிவு முறை
கடந்த 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களும் கடந்த 17-ந்தேதி முதல் இ-பதிவு முறை எடுத்திருக்க வேண்டும் என்று புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. எனவே அன்று காலை 6 மணி முதல் இ-பதிவு முறை நடைமுறைக்கு வந்தது.
வாகனம் பறிமுதல்
இந்தநிலையில் திருச்சி மாநகர எல்லையில் இ-பதிவு வைத்திருக்கிறார்களா? என்று போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி மாநகர எல்லையான கருமண்டபம், ஏர்போர்ட், குடமுருட்டி, ஸ்ரீரங்கம், காட்டூர், ஆயில்மில், அரிஸ்டோ ரவுண்டானா ஆகிய பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளை கடந்து வந்த கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் உலா வந்தவர்களை தடுத்து நிறுத்தி இ-பதிவு உள்ளதா? என்று சோதனை நடத்தினர். அப்போது போலீசார் அதிரடி நடவடிக்கையாக சில வாகனங்களை திருப்பி அனுப்பினர். உரிய இ-பதிவு இல்லாமல் காரணமின்றி சுற்றித்திரிந்தவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.