செல்வராசு எம்.பி. மீது கத்தி வீச்சு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தபோது நடந்த பரபரப்பு சம்பவம்

வேதாரண்யம் அருகே வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சென்ற செல்வராசு எம்.பி. மீது மர்ம நபர் ஒருவர் கத்தியை வீசினார். ஆனால் அந்த கத்தி அவர் மீது படாமல் அவரது ஜீப்பின் முன்பக்கத்தில் பட்டு கீழே விழுந்தது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செல்வராசு எம்.பி. மீது கத்தி வீச்சு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தபோது நடந்த பரபரப்பு சம்பவம்
Published on

வேதாரண்யம்,

நாகை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த எம்.செல்வராசு போட்டியிட்டு வெற்றி பெற்றார். சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்ட தொடரில் பங்கேற்று பேசிய அவர், தற்போது நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

வேதாரண்யம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நேற்று செல்வராசு எம்.பி. திறந்த ஜீப்பில் சென்றார். வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் இருந்து ஜீப்பில் புறப்பட்ட அவர் கோடியக்காடு, அகஸ்தியன்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சிவகுருபாண்டியன் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் உடன் இருந்தனர்.

கத்தி வீச்சு

நேற்று இரவு 8 மணி அளவில் அகஸ்தியன்பள்ளி காளியம்மன் கோவில் தெரு பகுதியில் செல்வராசு எம்.பி. திறந்த ஜீப்பில் நின்றபடி ஒலி பெருக்கி மூலமாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தார். அவருடைய பேச்சை கேட்பதற்காக ஜீப்பின் முன்பாக ஏராளமானோர் திரண்டு இருந்தனர்.

இந்த நிலையில் கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் செல்வராசு எம்.பி. மீது கத்தியை வீசினார். ஆனால் அந்த கத்தி அதிர்ஷ்டவசமாக அவர் மீது படாமல் ஜீப்பின் முன்பக்கத்தில் பட்டு கீழே விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உடனே கத்தி வீசிய மர்ம நபரை போலீசார் மற்றும் கூட்டணி கட்சியினர் தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை அங்கு காணவில்லை. கத்தி வீசிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பரபரப்பு

செல்வராசு எம்.பி. நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியையொட்டி ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் போலீசாரின் பாதுகாப்பையும் மீறி மர்ம நபர் செல்வராசு எம்.பி. மீது கத்தி வீசிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com