தொழில் நிறுவனங்களில் நிதி மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கம்

திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தொழில் நிறுவனங்களில் நிதி மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்து விளக்கும் கருத்தரங்கம் நடைபெற்றது.
தொழில் நிறுவனங்களில் நிதி மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கம்
Published on

திருப்பூர்,

மத்திய அரசின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. அமல் போன்றவற்றின் காரணமாக திருப்பூர் தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் ஒவ்வொரு தொழில்நிறுவனத்தையும் நிதி மேலாண்மையை சரியாக கையாள வைக்கும் வகையில், திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நிறுவனங்களில் நிதி மேலாண்மையின் முக்கியத்துவத்தை குறித்து விளக்கும் கருத்தரங்கம் கோர்ட்டு வீதியில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது.

இதில் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க செயலாளர் முருகசாமி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக ஆடிட்டர் சுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஒரு நிறுவனத்திற்கு தயாரிப்பு, நிதி மேலாண்மை ஆகியவை மிகவும் முக்கியம். இதில் நிதியை சரியான முறையில் கையாள வேண்டும். தினமும் நிறுவனத்தின் வரவு-செலவுகளை தொழில்துறையினர் கவனிக்க வேண்டும். இவ்வாறு கவனிப்பதால் நிதி நிலை குறித்து தெரிந்துகொள்ள முடியும்.

வங்கிகளில் கடன் வாங்குவது முதல், தொழிலை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு இது உதவும். வர்த்தக போட்டி அதிகரித்துள்ள நிலையில் தொழில்துறையினர் கவனமாக செயல்பட வேண்டும். நிதி மேலாண்மை சரியாக இல்லாத பல நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன் பின்னர் எளிமையான முறையில் வருமான வரி செலுத்தும் முறைகள், அதன் மூலம் தொழில்துறையினருக்கு கிடைக்கும் பலன்கள் ஆகியவை குறித்தும் அவர் விளக்கினார். தொடர்ந்து தனியார் வங்கிகளில் தொழில்துறையினருக்கு வழங்கப்படும் கடன் திட்டங்கள் குறித்து மணவாளன், சீனிவாசன் ஆகியோர் தெரிவித்தனர். இந்த கருத்தரங்கில் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க முதன்மை செயலாளர் பூபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com