

அனுப்பர்பாளையம்,
திருப்பூர் நெருப்பெரிச்சலில் உள்ள திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவுக்கு பள்ளி நிறுவனர் டாக்டர் ஜி.மோகன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளரும், முதல்வருமான சுதா மோகன் முன்னிலைவகித்தார். இதில் ராணுவ ஒருங்கிணைப்புக்குழு முன்னாள் தலைவர் ராஜசேகர் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து மாணவ-மாணவிகள் அணிவகுப்பை ஏற்று கொண்டார். விழாவில் முன்னாள் ராணுவ வீரர்கள் முரளதரன், விஜய்ராம், நெருப்பெரிச்சல் கிராம நிர்வாக அதிகாரி இளங்கோ, பள்ளி நிறுவனர் மோகனுடைய உறவினர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கர்மவீரர் காமராஜர் நல அறக்கட்டளை சார்பில் காமராஜர் விருது பெற்ற பள்ளி நிறுவனர் டாக்டர் மோகன் அனைவராலும் கவுரவிக்கப்பட்டார். விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகளும், பல்வேறு போட்டிகளும் நடைபெற்றது. முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
திருப்பூர் அணைபுதூர் ஏ.கே.ஆர். அகாடமி பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி தாளாளர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் மணிமலர் வரவேற்றார். விழாவில் திருப்பூர் மாவட்ட வேளாண்மை துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றினார். பின்னர் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், பல்வேறு போட்டிகளும் நடைபெற்றது. முடிவில் நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.