

கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி டால்துரை பங்களா தெருவைச் சேர்ந்தவர் கொம்பையா. ஓய்வுபெற்ற போலீஸ்காரர். இவருடைய மகன் மகாராஜன் (வயது 32), கார் டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
நேற்று மகாராஜன் கோவில்பட்டி திலகர் நகரில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் மாலையில் அங்கிருந்து தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். மகாராஜனின் முன்பாக, அப்பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவரான மாரியப்பனும் (60) நடந்து சென்றார்.
அப்போது அங்கு வந்த 4 மர்மநபர்கள் திடீரென்று மாரியப்பனை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் தலையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர், தன்னை எதற்காக வெட்டுகிறீர்கள்? என்று கூறி கூச்சலிட்டவாறு அலறி துடித்தார். அப்போது அந்த நபர்கள், ஆள்மாறாட்டத்தில் மாரியப்பனை வெட்டியதாக கூறி விட்டு, அங்கிருந்த மகாராஜனை ஓட ஓட விரட்டிச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் தலை, கைகள் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த மகாராஜன் கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். உடனே, 4 மர்மநபர்களும் தப்பி ஓடி விட்டனர்.
அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த மகாராஜன், மாரியப்பன் ஆகிய 2 பேரையும் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மகாராஜனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து, 2 பேரை அரிவாளால் வெட்டிய 4 மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.
கோவில்பட்டியில் நேற்று முன்தினம் இரவில் அ.தி.மு.க. பிரமுகர் பாலமுருகன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் ஓய்வுபெற்ற போலீஸ்காரர் மகன் உள்ளிட்ட 2 பேரை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.