திருச்சி மாவட்டத்தில் 2 இடங்களில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான சேவை மையங்கள்

திருச்சி மாவட்டத்தில் 2 இடங்களில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான சேவை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு ‘ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்கும் பணி நேற்று தொடங்கி உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் 2 இடங்களில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான சேவை மையங்கள்
Published on

திருச்சி,

தமிழகத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ, பி.டெக். பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி மே 2-ந்தேதி தொடங்கும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை பணியை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு பதிலாக தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது.

மாணவர்கள் வீட்டில் இருந்தோ அல்லது தனியார் கணினி மையங்களில் இருந்தோ ஆன்-லைன் மூலம் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். இணையதள வசதி இல்லாதவர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 42 இடங்களில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான சேவை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

அதன்படி திருச்சி மாவட்டத்தில் துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ஸ்ரீரங்கம் தாலுகா சேதுராப்பட்டியில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரி ஆகிய 2 இடங்களில் இந்த சேவை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று காலை பிளஸ்-2 படித்து முடித்த மாணவ- மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்து ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் செய்தனர்.

இந்த சேவை மையத்தில் கல்லூரி முதல்வர் தமிழ் செல்வன், தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன் ஆகியோர் ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வரும் மாணவ-மாணவிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கி உதவி செய்து வருகிறார்கள். விண்ணப்பம் செய்ய வரும் மாணவர்களிடம் அவர்களது பெயர், பிறந்த தேதி, செல்போன் எண், இ-மெயில் முகவரி, பெற்றோர் பெயர், முகவரி, 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பெற்ற மதிப்பெண் விவரங்கள் பெறப்படுகிறது.

பின்னர் அந்த விவரங்களை சம்பந்தப்பட்ட மாணவர் அல்லது மாணவியே கணினி மூலம் பதிவேற்றம் செய்வதற்கு அதிகாரிகள் உதவி செய்து வருகிறார்கள். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மையம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

முதல் நாளான நேற்று 11 மாணவ- மாணவிகள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்து உள்ளனர். விண்ணப்ப கட்டணம் ஏ.டி.எம். கார்டு மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் சான்றிதழ் சரிபார்க்கும் பணியானது வருகிற ஜூன் 6-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com