காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பள்ளிகொண்டா சுங்கச்சாவடி முற்றுகை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பள்ளிகொண்டா சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பெண்கள் உள்பட 61 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பள்ளிகொண்டா சுங்கச்சாவடி முற்றுகை
Published on

அணைக்கட்டு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், மத்திய அரசை கண்டித்தும், சுங்கச்சாவடியை அகற்றக்கோரியும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் 80-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று பள்ளிகொண்டா சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது அசம்பாவிதம் நடக்காமல் இருக்க குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சீனிவாசன் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் கே.எம்.செரீப் தலைமை தாங்கினார். மாநில இணை பொதுசெயலாளர் எ.இஸ்மாயில் முன்னிலை வகித்தார்.

அப்போது மாநில தலைவர் செரீப் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் 6 வார காலத்தில் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதை அமல்படுத்தாமல் மத்திய அரசு மெத்தனம் காட்டி வருகிறது. மேலாண்மை வாரியம் அமைக்காத காரணத்தினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

தமிழக அரசு அனைத்து கட்சி தலைவர்களை அழைத்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முற்றுகையின்போது வாகனங்களுக்கு கட்டணம் வாங்கக்கூடாது என்று திடீரென சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்பையும் மீறி தமிழக மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த சிலர் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி வேனில் ஏற்றினர்.

இதைத்தொடர்ந்து 11 பெண்கள் உள்பட 61 பேரை பள்ளிகொண்டா போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com