வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி - பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார்

வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வடக்கு போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்துள்ளனர்.
வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி - பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார்
Published on

திருப்பூர்,

திருப்பூர் ஓடக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

திருப்பூரில், எல்.ஐ.சி. முகவர் சங்கம் சார்பாக குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா செல்ல திட்டமிட்டோம். இதையடுத்து திருப்பூர் அவினாசி ரோட்டில் செயல்பட்டு வந்த டிராவல் கிராப்ட் என்ற சுற்றுலா ஏஜென்சியில் 64 பேர் இணைந்து வெளிநாடு சுற்றுலா செல்வதற்காக சுமார் ரூ.10 லட்சத்தை செலுத்தி இருந்தோம்.

அதில் 32 பேரை அந்த நிறுவனம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து சென்றது. அவர்கள் திரும்ப சொந்த ஊர்களுக்கு வந்து விட்டனர். மீதம் உள்ளவர்கள் 28-ந்தேதி வெளிநாடு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருப்பதாக அந்த நிறுவனத்தினர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று(27-5-2019) அந்த குறிப்பிட்ட ஏஜென்சி அலுவலகத்திற்கு சென்று பார்த்த போது, அந்த நிறுவனம் பூட்டப்பட்டிருந்தது. செல்போனில் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதையடுத்து அந்த ஏஜென்சியின் உரிமையாளரான மணிகண்டனின் வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு பூட்டப்பட்டிருந்தது. எங்களை போல சுற்றுலா செல்ல பணம் கட்டி இருந்த ஏராளமானோர் அலுவலகத்திற்கும், வீட்டிற்கும் அந்த நபரை தேடி அலைந்தனர்.

இதுகுறித்து விசாரித்ததில், அந்த நபர் எங்களிடம் இருந்து பல லட்சம் ரூபாயை பெற்று மோசடி செய்து விட்டு தலைமறைவாகியுள்ளது தெரியவந்துள்ளது. எங்களை போல பல குழுவினரும் லட்சக்கணக்கான ரூபாயை அந்த நிறுவனத்தில் செலுத்தி விட்டு ஏமாற்றத்துடன் நிற்கின்றனர். எனவே இந்த பிரச்சினையில் உரிய விசாரணை நடத்தி டிராவல் கிராப்ட் உரிமையாளர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com