

புதுடெல்லி,
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையரை புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி நேற்று சந்தித்தார். அப்போது அவர் அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அதாவது கடந்த மார்ச் 10-ந் தேதியில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. இதனால் புதுச்சேரி மாநிலத்தில் குடிநீர், துப்புரவு, பொது சுகாதாரம் ஆகியவை தொடர்பான திட்டங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளன. வாக்கு எண்ணிக்கை வரும் 23-ந் தேதி நடைபெற உள்ளது. அதுவரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் பட்சத்தில் மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகள் தடைபடும். எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகளை உடனடியாக தளர்த்தி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன்பின் தேர்தல் ஆணையத்துக்கு வெளியில் நிருபர்களிடம் நாராயணசாமி கூறியதாவது:-
எங்கள் மாநிலம் சிறிய மாநிலமாக இருந்தாலும் வளர்ச்சி திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம். தேர்தல் ஆணையத்தின் உத்தரவினால் இத்திட்டங்களை வேகமாக நிறைவேற்ற முடியவில்லை. எனவேதான் நேரில் சந்தித்து மனு அளிக்க முடிவு செய்தோம்.
புதுச்சேரி கவர்னர் 3 ஆண்டுகளுக்கு முன் எங்கள் மாநிலத்துக்கு வந்தார். தொடர்ந்து அவர் 2 ஆண்டுகளாக மாநில வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கோப்புக்களை எல்லாம் திருப்பி அனுப்புவது, அதிகாரிகளை அழைத்து கூட்டம் கூட்டுவது, பல இடங்களுக்கு சென்று ஆய்வு செய்வது என்று விதிமுறைகளுக்கு மாறாக நடந்து வருகிறார்.
ஏற்கனவே டெல்லி முதலமைச்சர் தொடர்ந்த வழக்கில் டெல்லி அரசுக்கும், கவர்னருக்கும் உள்ள அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் லட்சுமி நாராயணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் முழு அதிகாரம் உண்டு. கவர்னருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்று கோர்ட்டு கூறியுள்ளது.
இந்த தீர்ப்பை கவர்னர் மதிப்பார் என்று நினைக்கிறேன். அவருடைய நடவடிக்கையால் மாநிலத்தின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும். பிரதமர் மோடியின் தூண்டுதலால்தான் அவர் அப்படி நடந்து கொள்கிறார். இதற்கு பிரதமரும் பொறுப்பேற்க வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவில் காங்கிரஸ் ஆட்சி மத்தியில் அமையும். அப்போது கிரண்பெடி நிச்சயமாக எங்கள் மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்படுவார். அவர் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால் அவர் பல வளர்ச்சி திட்டங்களை தடுக்கிறார். மத்திய அரசின் நிதியை தடுக்கிறார். அவரை தவிர வேறு யார் வந்தாலும் எங்கள் மாநிலத்தில் விதிமுறைகளின் அடிப்படையில்தான் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.