சாக்கடை கால்வாய் வசதி கேட்டு மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

சாக்கடை கால்வாய் வசதி கேட்டு சேலம் மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சாக்கடை கால்வாய் வசதி கேட்டு மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
Published on

சேலம்,

சேலம் ஜாகீர்அம்மாபாளையம் எட்டிக்குட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சாக்கடை கால்வாய் வசதி கேட்டு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த டவுன் போலீசார் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசாரிடம் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் உள்ள 3 தெருக்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தெருக்களில் சாக்கடை கழிவு நீர் வெளியேறுவதற்கான கால்வாய் வசதி எதுவும் இல்லை. இதனால் கழிவுநீர் தனியார் பட்டா நிலங்களில் குளம் போல் தேங்கி நிற்கிறது.

இதைத்தொடர்ந்து தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசு அதிக எண்ணிக்கையில் உற்பத்தியாகிறது. இந்த கொசுக்கள் கடிப்பதால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. சிலருக்கு காய்ச்சல், வயிற்றுபோக்கு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே 3 தெருக்களுக்கும் சாக்கடை நீர் வெளியேறும் வகையில் தனியாக சாக்கடை கால்வாய் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.

அல்லது அருகில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை கால்வாய் அமைப்புடன் இணைக்க வேண்டும். இது தொடர்பாக கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர், சட்டமன்ற உறுப்பினர், மேயர் உள்ளிட்டோரிடம் 50-க்கும் மேற்பட்ட முறை புகார் மனு கொடுத்தோம். மனுவை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் நேரில் வந்து ஆய்வு மட்டுமே செய்கிறார்கள். ஆனால் கோரிக்கை குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை.

எனவே ஏதேனும் ஒரு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்து 3 தெருக்களுக்கும் கழிவு நீர் செல்லும் வகையில் சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதைக்கேட்ட போலீசார் இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உங்களில் சிலர் மட்டும் சென்று மனு கொடுக்கலாம் எனவும் தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் மனு கொடுத்து விட்டு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com