சாக்கடை கால்வாய், நடைபாதையை சுத்தம் செய்த கல்லூரி மாணவர்கள்

ஊட்டியில் சாக்கடை கால்வாய், நடைபாதையை கல்லூரி மாணவர்கள் சுத்தம் செய்தனர். மேலும், சுவரில் ஓவியங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சாக்கடை கால்வாய், நடைபாதையை சுத்தம் செய்த கல்லூரி மாணவர்கள்
Published on

ஊட்டி,

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா சாலை அருகே உள்ள சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் கோடப்பமந்து கால்வாயில் கலக்கிறது. இந்த சாக்கடை கால்வாயை ஒட்டியுள்ள நடைபாதையில் புகை பிடிப்பது, சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வந்தது. சாக்கடை கால்வாயில் குப்பைகளை வீசுவதால், அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நின்றது. மேலும் அப்பகுதியில் இரவு நேரத்தில் சிலர் அமர்ந்து மது அருந்திவிட்டு மதுபாட்டில்களை தூக்கி எறிந்து விட்டு செல்வதும் உண்டு.

ஒருபுறம் கழிவுநீர் தேங்கி கடும் தூர்நாற்றம் வீசியதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் இருந்தது. மறுபுறம் மதுபாட்டில்கள் உடைக்கப்பட்டு நடைபாதையில் சிதறி கிடந்ததால், அந்த வழியாக இரவு நேரத்தில் பெண்கள் நடந்து செல்வதற்கு பாதுகாப்பு இல்லாத நிலை காணப்பட்டது.

இந்த நிலையில் ஊட்டி தனியார் கல்லூரி மாணவர்கள் 15 பேர் தங்களது சொந்த செலவில் அந்த நடைபாதை மற்றும் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்தனர். கால்வாயில் தேங்கி கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, கழிவுநீர் செல்வதற்கு வழி ஏற்படுத்தினர். நடைபாதையில் பதிக்கப்பட்ட இன்டர்லாக் கற்கள் பெயர்ந்து கிடந்ததை சரிசெய்தனர். சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டாத வகையிலும், சிறுநீர் கழிக்காத வகையிலும் அங்கு தடுப்பு வேலி அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

காடுகளை அழித்தல், சுற்றுலா நகரமான ஊட்டியின் தோற்றம், புகை பிடித்தல், மது அருந்துதல், சாலை விபத்துகள், வன விலங்குகளை பாதுகாத்தல் ஆகியவை குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அப்பகுதியில் உள்ள சுற்றுப்புற சுவரில் தத்ரூபமாக ஓவியங்களை கல்லூரி மாணவர்களே வரைந்தனர். பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் மற்றும் பிளாஸ்டிக் குழாய்களை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தி, அதில் மண் நிரப்பி செடி நடவு செய்து சுவரில் தொங்க விட்டு உள்ளனர். இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:-

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டி நகரம் பிளாஸ்டிக் பொருட்களாலும், சாக்கடை கழிவுநீராலும் சுற்றுப்புற சூழல் மாசடைந்து வருகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள நடைபாதையை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர். அப்படி இருக்க, அந்த வழியாக நடந்து செல்ல முடியாத அளவுக்கு மாறி கிடந்தது.

ஆகவே, மாணவர்களாகிய நாங்கள் அந்த நடைபாதை மற்றும் சாக்கடை கால்வாயை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டோம். கால்வாயின் ஒரு புறத்தில் இருந்து பிளாஸ்டிக் குப்பைகள் வீசுவதை தடுக்க தடுப்பு வேலி அமைக்கப்பட்டு வருகிறது. வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களில் செடிகள் வளர்ப்பது குறித்து சுவரில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் சுவரில் தத்ரூப ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.

அப்பகுதியில் தெரு விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் இருட்டாக காணப்படுகிறது. எனவே, அப்பகுதியில் தெருவிளக்குகள் பொருத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடப்பமந்து கால்வாய் புதர் மண்டி கிடப்பதால் மழை பெய்யும் போது, அந்த சாக்கடை கால்வாயில் தண்ணீர் நிரம்பி நிற்கிறது. ஆகவே, கோடப்பந்து கால்வாயை தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com