பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு சாதிபெயரை சொல்லி திட்டிய கொத்தனாருக்கு தண்டனை

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து சாதி பெயரை சொல்லி திட்டிய கொத்தனாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு சாதிபெயரை சொல்லி திட்டிய கொத்தனாருக்கு தண்டனை
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரை ஒழுகச்சேரி மெயின்ரோட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மகன் அறிவழகன் (வயது32). கொத்தனார். அணைக்கரையை சேர்ந்த 23 வயது பெண் சித்தாள் வேலைக்கு வந்தார். அப்போது அவருடன் அறிவழகனுக்கு பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் வெவ்வேறு சாதியை சேர்ந்த 2 பேரும் 2011-ம் ஆண்டு கோவை அருகே உள்ள வாகரபாளையம் என்ற இடத்திற்கு சென்று திருமணம் செய்யாமலே குடும்பம் நடத்தி வந்தனர். இதன் விளைவாக அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். அப்போது அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி உள்ளார். அதற்கு அறிவழகன் மறுத்ததோடு அந்த பெண்ணை ஊருக்கு அனுப்பி உள்ளார்.

இதையடுத்து அந்த பெண்ணுக்கு கும்பகோணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் நடந்த சம்பவத்தை கூறி அந்த பெண்ணுக்கு வேறுஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. அதன் பின்னர் அறிவழகன் மீண்டும் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு, சாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த பெண் திருப்பனந்தாள் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் அறிவழகனை கைது செய்தனர். இந்த வழக்கு தஞ்சை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு மற்றும் குடியுரிமை பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி கார்த்திகேயன் விசாரித்து அறிவழகனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீல் சதீஷ்குமார் ஆஜரானார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com