பாலியல் தொல்லை: போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் வீடியோ வெளியிட்டு தூக்கில் தொங்கிய தம்பதி

பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் வீடியோ வெளியிட்டு தம்பதி தூக்கில் தொங்கினர். அதில் கணவன் உயிரிழந்தார். மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாலியல் தொல்லை: போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் வீடியோ வெளியிட்டு தூக்கில் தொங்கிய தம்பதி
Published on

சிக்கமகளூரு,

மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததுடன் வாலிபரின் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்ததால் வீடியோ வெளியிட்டு தம்பதி தூக்கில் தொங்கினர். இதில் கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்கா தாலுகா தோனகுண்டனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மயிலாரப்பா. அரசு பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சரோஜம்மா. இவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என தெரிகிறது. இந்த நிலையில், அதேப்பகுதியை சேர்ந்த வினய் (வயது 25) என்பவர் சரோஜம்மாவுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

மயிலாரப்பா வீட்டில் இல்லாத நேரத்தில், அவருடைய வீட்டுக்குள் நுழைந்து சரோஜம்மாவுக்கு வினய் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் தனது ஆசைக்கு இணங்கும்படியும் சரோஜம்மாவை வினய் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த சரோஜம்மா, வினயை கண்டித்துள்ளார்.

ஆனாலும் வினய், தொடர்ந்து சரோஜம்மாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். வினயின் தொல்லை எல்லை மீறி செல்லவே, இதுகுறித்து சரோஜம்மா தனது கணவரிடம் தெரிவித்தார். இதனால் மயிலாரப்பாவும் வினயை கண்டித்துள்ளார். அதனையும் வினய் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது.

இதனால் மயிலாரப்பாவும், சரோஜம்மாவும் சேர்ந்து வினய் மீது ஸ்ரீராமபுரா போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் வினயின் உறவினர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்பதால் இந்த புகாரின் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி மனமுடைந்து காணப்பட்டனர்.

இந்த நிலையில், கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். அதற்கு முன்பாக கணவன்-மனைவி இருவரும் வீடியோ ஒன்று பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மயிலாரப்பா பேசியிருப்பதாவது:-

எங்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. எங்களுக்கு குழந்தை இல்லை. எனது மனைவிக்கு எங்கள் கிராமத்தை சேர்ந்த வினய் என்பவர் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். பலமுறை கண்டித்தும் அவர் கேட்பதாக இல்லை. இதுகுறித்து வினய் மீது போலீசில் புகார் கொடுத்தோம். ஆனால் வினயின் உறவினர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்பதால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வினயின் குடும்பத்தினர் என்னிடம் வந்து போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெற வேண்டும் என்றும், அவ்வாறு வாபஸ் பெற்றால் ரூ.5 லட்சம் தருவதாகவும் கூறினார்கள். ஆனால் அதற்கு நான் மறுத்தேன். இதனால் அவர்கள் எங்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுக்கிறார்கள்.

மேலும் என்னையும், என்னுடைய மனைவி சரோஜம்மாவை பற்றியும் எங்கள் கிராமத்தில் தவறாக பேசி வருகிறார்கள். இதனால் நாங்கள் மிகவும் மன கஷ்டத்தில் உள்ளோம். எங்களுக்கு ஆதரவாக யாரும் இல்லை. இதனால் நாங்கள் தற்கொலை செய்துகொள்கிறோம். எங்களின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வினயை எக்காரணம் கொண்டும் மன்னித்து விடக்கூடாது. எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசியிருந்தார்.

இதையடுத்து அவர்கள் 2 பேரும் அந்த கிராமத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு கொண்டனர். இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோவ பார்த்து அவருடைய உறவினர்கள் மற்றும் ஸ்ரீராமபுரா போலீசார் அவர்களை பல இடங்களில் தேடினார்கள். பின்னர் அந்தப்பகுதியில் உள்ள மரத்தில் கணவன்-மனைவி இருவரும் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போலீசார் அவர்கள் 2 பேரையும் மீட்டனர். ஆனால் மயிலாரப்பா பரிதாபமாக உயிரிழந்திருந்தார். சரோஜம்மாவின் கழுத்தில் கயிறு சரியாக இறுக்காததால் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதையடுத்து போலீசார் சரோஜம்மாவை மீட்டு சிகிச்சைக்காக சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவமொக்கா தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து போலீசார் மயிலாரப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசதுர்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை அறிந்த வினய் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து ஸ்ரீராமபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து வினயை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் சித்ரதுர்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com