சின்னமனூர் அருகே, ஆடு மேய்க்கும் தொழிலாளி கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை - தேனி கோர்ட்டு தீர்ப்பு

சின்னமனூர் அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளி கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
சின்னமனூர் அருகே, ஆடு மேய்க்கும் தொழிலாளி கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை - தேனி கோர்ட்டு தீர்ப்பு
Published on

தேனி,

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை வடக்குத் தெருவை சேர்ந்தவர் சடையாண்டி (வயது 63). இவருடைய மகன் ராஜ்குமார் (30). ஆடு மேய்க்கும் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த கலிங்கன் மகன் ராஜீவ்காந்தி (32). இவரும் ஆடு மேய்த்து வருகிறார். ராஜீவ் காந்தியும் அவருடைய உறவினர்கள் சிலரும் அதே பகுதியில் பொது பாதையில் ஆட்டுக்கொட்டகை அமைத்தனர். அதை ராஜ்குமார் தட்டிக்கேட்டார்.

இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தால் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 15-ந்தேதி ராஜ்குமாரை, ராஜீவ்காந்தி மற்றும் சிலர் தென்னை மட்டையால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் இறந்தார்.

இந்த கொலை குறித்து சடையாண்டி சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜீவ்காந்தி, அவருடைய மனைவி நாகலட்சுமி (29), அதே பகுதியை சேர்ந்த அழகுமலை (39), அவருடைய மனைவி கமலா (34), முருகன் (48), அவருடைய மனைவி சஞ்சீவியம்மாள் (38) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் டி.கே.ஆர்.கணேசன் ஆஜரானார்.

வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து, நீதிபதி சீனிவாசன் நேற்று தீர்ப்பு கூறினார். இந்த கொலை வழக்கில் ராஜீவ்காந்தி, நாகலட்சுமி, அழகுமலை, கமலா, முருகன், சஞ்சீவியம்மாள் ஆகிய 6 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com