சோளிங்கர், அரக்கோணம் பகுதி சோதனை சாவடிகளில் கலெக்டர் ஆய்வு

சோளிங்கர், அரக்கோணம் பகுதியில் உள்ள சோதனைச்சாவடிகளில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சோளிங்கர், அரக்கோணம் பகுதி சோதனை சாவடிகளில் கலெக்டர் ஆய்வு
Published on

சோளிங்கர்,

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்தும், சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் வாகனங்கள் வந்து செல்வதை கண்காணிக்க மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டுள்ளார். அதற்காக மாவட்ட எல்லைப் பகுதியில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் சோளிங்கரில் சித்தூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கலெக்டர், சோதனைச் சாவடியில் பணியாற்றும் போலீசார், பணியாளர்கள் எவ்வாறு, எப்படி வேலை பார்க்க வேண்டும் என விளக்கினார். என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது? எனக் கேட்டறிந்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்களை ராணிப்பேட்டை மாவட்டத்தின் உள்ளே அனுமதிக்கக்கூடாது என உத்தரவிட்டார். பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை திருப்பி அனுப்ப வேண்டும், மருத்துவச் சிகிச்சைக்காக செல்வோரை மட்டும் அனுமதிக்க வேண்டும், தனியார் நிறுவனங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பரிந்துரைக்கப்பட்ட பஸ்களில் மட்டும் வேலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும், மோட்டார்சைக்கிள்களில் வந்தாலும் அனுமதிக்கக்கூடாது, வாகனங்களை கணக்கெடுக்க பதிவேடு பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

ஆய்வின்போது அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன், தாசில்தார் பாஸ்கர், வருவாய் ஆய்வாளர் யுவராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

அதேபோல் அரக்கோணம் அருகே திருத்தணி செல்லும் சாலையில் உள்ள மாவட்ட எல்லைப்பகுதியான இரட்டைகுளம் சோதனைச்சாவடியில் நேற்று கலெக்டர் திவ்யதர்ஷினி, போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின்போது சோதனைச் சாவடி பகுதியில் போலீசார், வருவாய்த்துறை அலுவலர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், இ-பாஸ் எடுத்து வரும் வாகனங்களில் இ-பாஸ் அசலாக இருக்கிறதா? என்பதை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். சரியான இ-பாஸ் எடுத்து வருபவர்களை கொரோனா பரிசோதனைக்கு பின் மாவட்டத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தனர்.

ஆய்வின் போது உதவி கலெக்டர் பேபிஇந்திரா, தாசில்தார் ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை, வருவாய் ஆய்வாளர் கல்யாணி, கிராம நிர்வாக அலுவலர் முகமது இலியாஸ் மற்றும் போலீசார், வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com