வேளாண் அவசர சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு

வேளாண் அவசர சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வேளாண் அவசர சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு
Published on

திருவாரூர்,

மத்திய அரசு அமல்படுத்தி உள்ள வேளாண் அவசர சட்டங்களை திரும்ப பெற கேட்டும், இந்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. திருவாரூர் பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் அனைத்து சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. பஸ்கள் வழக்கம் போல இயங்கிய போதும் மக்கள் கூட்டமின்றி அமைதியாக காணப்பட்டது.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூரில் மத்திய அரசு அமல்படுத்தி உள்ள வேளாண் அவசர சட்டங்களை கண்டித்து ஆஸ்பத்திரி சாலை, பெரியக்கடைத்தெரு, மேலக்கடைத்தெரு, ரேடியோபார்க், லெட்சுமாங்குடி 4 வழி சாலையில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம், பொதக்குடி பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் அந்த பகுதியில் கடைவீதியில் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

மன்னார்குடி

நீடாமங்கலத்தில் நகரின் முக்கிய பகுதிகளான ரெயில் நிலை சந்திப்பு, மேலராஜவீதி, அண்ணாசிலை, ஆலங்குடி, கோவில்வெண்ணி, ஆதனூர், முன்னவால்கோட்டை பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இந்த போராட்டத்துக்கு நீடாமங்கலம் பகுதி வர்த்தகர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

மன்னார்குடியில் நகரின் முக்கிய பகுதிகளான மேலராஜவீதி, காந்திரோடு, நடேசன்தெரு, ஆகிய பகுதிகளில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள் வழக்கம்போல் இயங்கினாலும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

திருமக்கோட்டையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகவும் 130 கடைகளும் அடைக்கப்பட்டன. கார், வேன் ஆட்டோக்கள் ஓடவில்லை.

இதைப்போல நன்னிலம், பூந்தோட்டம், பேரளம், சன்னாநல்லூர் ஆகிய பகுதிகளில் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com