கடைகள் அடைப்பு; பஸ்கள் வழக்கம் போல் ஓடின திருமங்கலத்தில் பஸ் கண்ணாடி உடைப்பு

வாடிப்பட்டி, அலங்காநல்லூர், திருமங்கலம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. ஆனால் பஸ்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடின. திருமங்கலத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல் செய்தனர்.
கடைகள் அடைப்பு; பஸ்கள் வழக்கம் போல் ஓடின திருமங்கலத்தில் பஸ் கண்ணாடி உடைப்பு
Published on

திருமங்கலம்,

திருமங்கலத்தில் இருந்து உசிலம்பட்டிக்கு நேற்றுமுன்தினம் இரவு ஒரு அரசு பஸ் சென்றது. சிந்துபட்டி கருப்பு கோவில் அருகே பஸ் வந்த போது மறைந்திருந்த 2 பேர் வேகமாக வந்து பஸ்சின் மீது கல்வீசி தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் தி.மு.க. உள்பட அதன் தோழமை கட்சிகள் நடத்திய கடை அடைப்பு போராட்டத்தில், திருமங்கலம் நகரில் உள்ள வியாபாரிகள் 75 சதவீதம் பேர் கடைகளை அடைத்தனர். பஸ்நிலைய கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. நேற்று முகூர்த்த தினம் என்பதால், திருமண விருந்திற்காக பதிவு செய்யப்பட்டிருந்த ஓரிரு ஓட்டல்கள் திறக்கப்பட்டு இருந்தன. நகரில் மார்க்கெட் மற்றும் சின்னக்கடைவீதிகள் வெறிச் சோடி காணப்பட்டன.

திருமங்கலம் பஸ்நிலையம் முன்பு ஊர்வலமாக வந்த தி.மு.க.வினர் திடீர் மறியல் செய்தனர். அதில் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், நகர செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் தன்பாண்டியன், ராமமூர்த்தி, மூக்கையா, அவைதலைவர் கப்பலூர் சந்திரன், சிவமுருகன் இஞைரணியினர் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 11 பேரையும் போலீசார் கைது செய்தனர். வாடிப்பட்டி

வாடிப்பட்டி பஸ்நிலையத்தில் பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின. ஆனால் பஸ்நிலைய வணிகவளாகம், லாலாபஜார், மந்தை பகுதி வணிகவளாகம், பேரூராட்சி பகுதியில் உள்ள வணிக வளாகங்கள் உள்பட சாலையின் இருபுறம் இருந்த உணவு விடுதிகள், பலசரக்குகடைகள், பெட்டிக்கடைகள், உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மருந்துகடைகள் மட்டும் திறந்து இருந்தது.

இதேபோல அலங்காநல்லூரில் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதில் காலையில் இருந்து மாலை வரை அனைத்து கடைகளும் மூடப்பட்டு மாலையில் திறக்கப்பட்டன. ஆனால் அரசு, தனியார் பஸ்கள் வழக்கம் போல் ஓடின.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com