துப்பாக்கி சூட்டில் பலியான மாணவி உள்பட 2 பேர் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியான மேலும் 2 பேரது உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மீது கொலை வழக்கு பதிவு செய்யும் வரை மாணவி சுனோலின் வெனிஸ்டா, தமிழரசன் ஆகியோரது உடல்களை வாங்கமாட்டோம் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
துப்பாக்கி சூட்டில் பலியான மாணவி உள்பட 2 பேர் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட கலவரம் காரணமாக போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

இதில் 7 பேரின் உடல்கள் ஏற்கனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இருந்தது. இந்த உடல்கள் ஐகோர்ட்டு உத்தரவுப்படி நேற்று மறுபிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. ஜிப்மர் மருத்துவக்கல்லூரி டாக்டர் அம்பிகா பிரசாத் பத்ரா, டாக்டர்கள் மனோகரன், சுடலைமுத்து ஆகியோர் அடங்கிய குழுவினர் பரிசோதனை செய்தனர்.

இந்த பரிசோதனை நேற்று முன்தினம் மதியம் 12.45 மணிக்கு தொடங்கி நேற்று அதிகாலை 2 மணி வரை 7 பேரின் உடல்களும் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மீதம் உள்ள 6 பேரின் உடல்கள் கோர்ட்டு உத்தரவுப்படி பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. பிரேதபரிசோதனை முடிந்த சண்முகம், கார்த்திக், செல்வசேகர் ஆகிய 3 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.

நேற்று காலை காளியப்பன், கந்தையா ஆகியோரின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

கந்தையா உடலை போலீசார் பாதுகாப்பாக அவருடைய வீட்டுக்கு கொண்டுசென்றனர். அங்கு பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதேபோன்று காளியப்பன் உடலும் பாதுகாப்பாக அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, அஞ்சலிக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டது.

மாணவி சுனோலின் வெனிஸ்டா, தமிழரசன் ஆகியோர் உடல்கள் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க தயார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அவர்களுடைய உறவினர்கள், துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமான கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், ஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கான உத்தரவை சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து வருகின்றனர். இதனால் 2 பேரின் உடல்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

பிரேத பரிசோதனை செய்யப்படாத அந்தோணி செல்வராஜ், கிளாஸ்டன், ஜான்சி, மணிராஜ், ரஞ்சித்குமார், ஜெயராமன் ஆகிய 6 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஒரு வாரத்துக்கு பிறகு பிரேத பரிசோதனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com