

நாகர்கோவில்,
தமிழகத்தில் பா.ஜனதா மிகவேகமாக வளர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய அரசியல் இடைவெளியை பூர்த்தி செய்து, மாநிலத்தில் முதல்நிலை கட்சியாக பா.ஜனதா உருவாகி வருகிறது. ஏராளமானோர் பா.ஜனதாவில் தங்களை இணைத்து வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், அரசியல் கட்சிகளைச் சாராதவர்களும் இணைந்து வருகிறார்கள். இன்று (அதாவது நேற்று) பா.ம.க. மாநில துணை தலைவர் காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காஞ்சி குமாரசாமி தன்னை பா.ஜனதாவில் இணைத்துக்கொண்டுள்ளார். அதேபோன்று பா.ம.க. ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோரும் பா.ஜனதாவில் இணைந்துள்ளனர்.
மதத்துடன் ஒப்பிட வேண்டாம்
தமிழகத்தில் புதிய, புதிய போராட்டங்களை உருவாக்கக்கூடிய முயற்சியில் பலர் இறங்கி இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. முன்னுக்குப்பின் முரணாக பேசுவது, மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை பரப்புவது, சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது அதை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்திக் கொள்வது, இதேல்லாம் இப்போது தமிழகத்தில் சகஜமாகிவிட்டது.
கால்நடைகளை காப்பாற்றுவது தொடர்பான நடவடிக்கையை யாரும் மதத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். அரசியலோடும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். இது முழுக்க, முழுக்க நமது நாட்டினுடைய பாரம்பரியம் மிக்க கால்நடைகளை காப்பாற்ற மத்திய அரசு எடுத்துள்ள மிகப்பெரிய நடவடிக்கை ஆகும்.
இயற்கை ஆர்வலர் நம்மாழ்வார் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவர் சொல்லும் விஷயங்கள் இயற்கை உரங்கள், சாணம், தழை உரங்கள் போன்றவற்றை வேளாண்மையில் பயன்படுத்த வேண்டும், உணவு விஷமாவதை தடுக்க வேண்டும் என்பதாகும். தற்போது நாடு முழுவதும் அதற்கான விழிப்புணர்வு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
பசுமாடுகளை பராமரிப்பது சிரமம் என்ற புதிய சித்தாந்தத்தை உருவாக்கிய காரணத்தால் பசுமாடு சுமையாக கருதப்பட்டு, அவற்றை அடிமாட்டுக்கு விற்பனை செய்யும் நிலை வந்துள்ளது. மாட்டு இறைச்சி சாப்பிடக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. மத்திய அரசு விதித்துள்ள தடையில் மாட்டு இறைச்சி சாப்பிடக்கூடாது என்றும் சொல்லப்படவில்லை. சந்தையில் விற்கப்படும் மாடுகளுக்கு விதிமுறைகள் உள்ளன. மத்திய அரசின் நடவடிக்கையை கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் எதிர்ப்பது ஓட்டு அரசியல் நடத்துவதற்காக.
ஒத்துழைப்பு
மேட்டூர் அணையை தூர்வாரும் நடவடிக்கை நல்ல விஷயம். காலம் கடந்த செயல். இருந்தாலும் அந்த முயற்சியை பாராட்டுகிறேன். அந்த அணையில் இருந்து அள்ளப்படும் மண் விவசாய நிலங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். மண்பாண்டத் தொழிலில் ஈடுபடக் கூடியவர்களுக்கு அந்த மண் கிடைக்க வேண்டும். மணல் வியாபாரிகள், மண் விற்பனையாளர்கள் இடைத்தரகர்களாக இருந்து செயல்படுவது தடுக்கப்பட வேண்டும்.
ஜி.எஸ்.டி. வரியை பொறுத்தவரையில் வணிகர்களும், மற்றவர்களும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். வணிகர்கள் எப்பொழுது எல்லாம் மத்திய மந்திரியை சந்தித்து பிரச்சினைகளை எடுத்துச்சொல்ல காலஅவகாசம் கேட்டார்களோ, அப்போது எல்லாம் மத்திய மந்திரியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்து தந்தோம். ஜி.எஸ்.டி. வரி குறித்த பிரச்சினை ஒரு மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. நாடு முழுவதும் உள்ள விஷயம். எனவே எல்லோரும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
தற்போது தென்மேற்குப் பருவமழை தொடங்கப் போவதாக செய்தி வருகிறது. இறைவனிடம் போதுமான மழை பெய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். குமரி மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலைக்கு அல்லாமல், வரக்கூடிய 50 ஆண்டு காலத்தை கருத்தில் கொண்டு கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்ற முயன்று வருகிறேன். மற்ற மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்வேன்.
நடவடிக்கை வேண்டும்
பால் கலப்படம் பற்றிய விவாதம் வெற்று விவாதமாக மாறிவிடக்கூடாது என்பது நமது கவலை. குழந்தைகளுக்கு, மனிதர்களுக்கு ஒவ்வாத பொருட்கள் பாலில் சேர்க்கப்படுவதாக ஒரு விஷயம் வந்துள்ளது. இதை உடனடியாக தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சவால் விட்டுக் கொண்டிருக்கக்கூடாது.
தமிழருவி மணியன் கூறிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக சட்டசபையில் முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதா உருவப்படம் திறப்பது தொடர்பாக நான் கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை.
தடுத்து நிறுத்துங்கள்
தமிழக அரசு ஒரு விஷயத்தில் கவனம் கொடுக்க வேண்டும். தமிழக மக்களும் கவனம் கொடுக்க வேண்டும். கழிவுகள் நிறைந்த மாநிலமாக, கழிவுகள் கொட்டப்படும் மாநிலமாக, பிற மாநிலக் கழிவுகளை இங்கு வந்து கொட்டும் எருக்கிடங்காக தமிழகம் மாறுவதை தயவுசெய்து தடுத்து நிறுத்துங்கள். அரசியலுக்கு வருவது ரஜினிகாந்தின் விருப்பத்தை பொறுத்தது.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.