ராணிப்பேட்டை புதிய மாவட்டத்திற்கான கருத்து கேட்பு கூட்டத்தில் கூச்சல்-குழப்பம்

ராணிப்பேட்டை புதிய மாவட்டத்திற்கான கருத்து கேட்பு கூட்டத்தில் கூச்சல் -குழப்பம் ஏற்பட்டது.
ராணிப்பேட்டை புதிய மாவட்டத்திற்கான கருத்து கேட்பு கூட்டத்தில் கூச்சல்-குழப்பம்
Published on

ஆற்காடு,

வேலூர் மாவட்டத்தை பிரித்து ராணிப்பேட்டையை புதிய மாவட்டமாக உருவாக்குவது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் மேல்விஷாரத்தில் உள்ள சி.அப்துல் ஹக்கீம் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியின் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக கூடுதல் தலைமை செயலாளர் கே.சத்தியகோபால் தலைமை தாங்கினார். கலெக்டர் சண்முக சுந்தரம், வருவாய் அலுவலர் பார்த்திபன், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த தன்னார்வலர்கள், வணிகர் சங்கங்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.

ஆற்காடு தொகுதியை சேர்ந்தவர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பே ஆற்காடு பெயரில் வட ஆற்காடு, தென்ஆற்காடு என்ற மாவட்டங்கள் இருந்தன. எனவே, இப்போது பிரிக்கப்பட உள்ள மாவட்டத்தை ராணிப்பேட்டையை தலைநகராக கொண்டு ஆற்காடு மாவட்டம் என அறிவிக்க வேண்டும் என்றனர்.

ராணிப்பேட்டை பொதுமக்கள் கூறுகையில், ராணிப்பேட்டை ஏற்கனவே வருவாய் கோட்டமாக உள்ளது. கலெக்டர் அலுவலகம் அமைக்க அரசு நிலங்கள் உள்ளன. தண்ணீர் பிரச்சினை இல்லை. எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தை உருவாக்கி அனைத்து அலுவலகங்களும் ராணிப்பேட்டை பகுதியில் அமைக்க வேண்டும் என்று கூறினர்.

சோளிங்கர் பொதுமக்கள் கூறுகையில், சோளிங்கர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். சோளிங்கரை தாலுகாவாக உருவாக்க வேண்டும். ஆற்காடு, ராணிப்பேட்டை, அரக்கோணம் ஆகிய பகுதிகளுக்கு சரிபாதி தூரத்தில் சோளிங்கர் அருகே உள்ள ஜம்புகுளம் பகுதியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்க வேண்டும் என்றனர்.

மேலும் வாலாஜா ஒன்றியத்தில் உள்ள காட்பாடி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த லாலாப்பேட்டை, ஏகாம்பரநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளை ராணிப்பேட்டை மாவட்டத்தில் சேர்க்க வேண்டும். வட ஆற்காடு ராணிப்பேட்டை மாவட்டம் என்று அறிவிக்க வேண்டும்.

ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளுக்கு இடையில் உள்ள காவேரிப்பாக்கம் பகுதியில் மாவட்ட நிர்வாக அலுவலகங்களை அமைக்க வேண்டும்என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.

அரக்கோணம் பகுதி மக்கள் கூறுகையில், அரக்கோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகாலமாக போராடி வருகிறோம். எங்கள் ஊருக்கு மாவட்டத்தின் தலைநகரமாக அறிவிக்க எல்லா தகுதிகளும் உள்ளன. எனவே நீண்டகால கோரிக்கையான அரக்கோணத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

மேலும் அரக்கோணம் வேலூர் மாவட்டத்தில் பெரிய நகரம் ஆகும். இங்கிருந்து எல்லா பகுதிகளுக்கும் செல்ல ரெயில் வசதி உள்ளது. எனவே, அரக்கோணம் மாவட்டம் அமைக்க ஆவண செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கருத்துகளை தெரிவித்து பலர் பேசினர்.

இறுதியாக கூடுதல் தலைமை செயலாளர் சத்தியகோபால் பேசுகையில், இதுவரை வேலூரில் 110 மனுக்களும், திருப்பத்தூரில் 225 மனுக்களும், ராணிப்பேட்டையில் 240 மனுக்களும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன என்றார்

இதனிடையே மேல்விஷாரம் நகராட்சிக்குட்பட்ட ராசாத்துபுரம் பகுதியை சேர்ந்த கோபி, தர்மராஜ் ஆகியோர் மேல்விஷாரம் நகராட்சியில் இருந்து ராசாத்துபுரம் பகுதியை பிரித்து தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்றனர். மேலும் சுற்றுச்சூழலால் பாதிக்கப்பட்ட நகரம் ராணிப்பேட்டை. இதனை மாவட்டத்தின் தலைநகரமாக எவ்வாறு அறிவித்தீர்கள் என கேள்வி எழுப்பினர். இதற்கு ராணிப்பேட்டையை சேர்ந்த நபர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் கூச்சல், குழப்பம் எற்பட்டது.

அப்போது மேடையில் இருந்து கலெக்டர் சண்முகசுந்தரம் கீழே இறங்கி வந்தார். அவர் தர்மராஜிடம் கருத்துகளை கேட்டறிந்தார். மேலும் பிரச்சினைக்குறிய கருத்துகளை கூற வேண்டாம் என அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் முகம்மதுஜான் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சு.ரவி, சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எல்.இளவழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com