குறுங்காடுகள் வளர்ப்புத் திட்டம் சாதனை நிகழ்வாக அங்கீகரிப்பு - கலெக்டர் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1000 குறுங்காடுகள் வளர்ப்புத் திட்டம் சாதனை நிகழ்வாக அங்கீகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் வீரராகவராவ் கூறினார்.
குறுங்காடுகள் வளர்ப்புத் திட்டம் சாதனை நிகழ்வாக அங்கீகரிப்பு - கலெக்டர் தகவல்
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 1000 குறுங்காடுகள் வளர்ச்சி திட்டப் பணிகளை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி ஆகிய நிறுவனங்களின் மூலம் உலக சாதனை நிகழ்வாக அங்கீகரித்து கலெக்டர் வீரராகவராவிற்கு அங்கீகார சான்று வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், கலெக்டர் பேசியதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் பசுமையான சூழலை அதிகரித்து சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் நோக்கில் மாவட்டத்தில் உள்ள 429 கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.30 கோடி மதிப்பீட்டில் 1000 குறுங்காடுகள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பசுமை போர்வையினை அதிகப்படுத்தவும் நடவு செய்யப்படும் செடிகளின் உயிர்ப்பு விகிதத்தினை அதிகப்படுத்திடவும் குறுங்காடுகள் வளர்ப்பு முறையில் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டன. குறிப்பாக, பாரம்பரிய வகைகளான நாட்டுப்பூவரசு, நாட்டு வாகை, புங்கன், ஆவி போன்ற மரக்கன்றுகளும், வேம்பு, புளி, நாவல், கொய்யா, மாதுளை, சீத்தா, நெல்லி போன்ற பழம் தரும் மரங்களும் நடவு செய்யப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்பட மரக்கன்றுகள் 1 மீட்டர் இடைவெளியில் நடவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குறுங்காடுகள் வளர்ப்பு பணியானது மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் பயன்பாடற்ற தரிசுநிலங்கள், குப்பை, கழிவுகள் தேங்கிய இடங்கள், சீமைக்கருவேல மரங்கள் நிறைந்த இடங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு அப்பகுதிகளை முறையே சுத்தம் செய்து பசுமையான குறுங்காடுகளாக ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக 500 ச.மீ அளவுள்ள நிலப்பரப்பு 4 மீ அகலத்தில் தெரிவு செய்யப்பட்டு 500 மரக்கன்றுகள் நடப்பட்டது. குறுங்காடுகள் வளர்ப்பு பணியின் மூலம் மாவட்டத்தில் இதுவரை 58 ஏக்கர் பரப்பளவு கருவேல மரங்கள் நிறைந்த நிலங்கள் சீர்திருத்தம் செய்யப்பட்டும், 12 ஏக்கர் அளவுள்ள குப்பை மேடுகள், கழிவு நீர் தேங்கிய பகுதிகள் சீர்திருத்தம் செய்யப்பட்டும், குறுங்காடுகளாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பசுமையான சூழல் மேம்படுவதோடு சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

தற்போது மாவட்டத்தில் 1000 குறுங்காடுகள் அமைக்கப்பட்டு 5,41,050 மரக்கன்றுகள் நடப்பட்டு சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் இத்திட்டப் பணிகளை சாதனை நிகழ்வாக அங்கீகரிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு சான்றிதழ் வழங்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள 1000 குறுங்காடுகள் வளர்ப்பு திட்டப் பணிகளை உலக சாதனை நிகழ்வுகளை அங்கீகரிக்கும் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் ஏஸியா பசிபிக் அம்பாஸிடர் கார்த்திகேயன் ஜவஹர், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தின் சீனியர் அட்ஜுடிகேட்டர் சிவக்குமரன், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி உலக சாதனை நிறுவனத்தின் அஸோசியேட் எடிட்டர் ஜெகந்நாதன், சீனியர் ரெக்கார்ட்ஸ் மேனேஜர் பாலாஜி மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனத்தின் கள ஆய்வு அதிகாரி பாலசுப்ரமணியன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு மதிப்பீடு செய்தனர். தொடர்ந்து, ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்குறிப்பிட்டுள்ள 4 நிறுவனங்களின் மூலம் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டப் பணிகளை சாதனை நிகழ்வாக அங்கீகரித்து அங்கீகாரம் வழங்கப்பட்டது. இத்திட்டப்பணியில் ஈடுபட்ட அனைத்து நிலை பணியாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரதீப்குமார், ராமநாதபுரம் சப்- கலெக்டர் சுகபுத்ரா, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சிவகாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வீரகணபதி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com