ஓட்டல் ஊழியருக்கு அரிவாள் வெட்டு-வியாபாரிகள் சாலை மறியல்

நெல்லை அருகே பிரியாணி பார்சல் கேட்டு தகராறு செய்த 3 பேர் கும்பல், ஓட்டல் ஊழியரை அரிவாளால் வெட்டியது. இதையடுத்து அந்த கும்பலை கைது செய்யக்கோரி வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓட்டல் ஊழியருக்கு அரிவாள் வெட்டு-வியாபாரிகள் சாலை மறியல்
Published on

முக்கூடல்:

நெல்லை அருகே பிரியாணி பார்சல் கேட்டு தகராறு செய்த 3 பேர் கும்பல், ஓட்டல் ஊழியரை அரிவாளால் வெட்டியது. இதையடுத்து அந்த கும்பலை கைது செய்யக்கோரி வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரியாணி பார்சல்

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையை சேர்ந்தவர் ஜான்கென்னடி. இவர் முக்கூடல் ஆலங்குளம் ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் சிங்கம்பாறை மிஷன் கோவில் தெருவைச் சேர்ந்த தங்கராஜ் மகன் சகாயபிரவீன் (வயது 24) ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இந்த ஓட்டலுக்கு நேற்று மதியம் 3 மர்மநபர்கள் வந்து பிரியாணி பார்சல் கேட்டனர். அப்போது பார்சல் கொடுக்க தாமதம் ஆனதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கும், ஓட்டல் ஊழியர் சகாயபிரவீனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஊழியருக்கு அரிவாள் வெட்டு

இதில் ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள், கடையின் முன்பக்கம் இருந்த முட்டைகள், புரோட்டாக்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து சாலையில் வீசி சூறையாடினர். மேலும் சகாயபிரவீனை அரிவாளால் வெட்டினர். பின்னர் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை அள்ளிக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.

அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த சகாயபிரவீனை அங்கிருந்தவர்கள் மீட்டு முக்கூடல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

சாலை மறியல்

இதற்கிடையே, ஓட்டலை மர்மகும்பல் சூறையாடியதை கண்டித்து முக்கூடல் ஆலங்குளம் ரோட்டில் உள்ள அனைத்து கடைகளையும் வியாபாரிகள் அடைத்தனர். பின்னர் சம்பவம் நடந்த கடைக்கு முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பொதுமக்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அதுவரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றும் கூறினர்.

அவர்களிடம் சேரன்மாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், முக்கூடல் சப்-இன்ஸ்பெக்டர் காவுராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், குற்றவாளிகளை விரைவில் கைது செய்து விடுவோம் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து, வியாபாரிகள், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பரபரப்பு

ஓட்டலில் பிரியாணி பார்சல் கேட்டு தகராறு செய்த மர்மநபர்கள் ஊழியரை அரிவாளால் வெட்டியதும், அதை கண்டித்து வியாபாரிகள் போராட்டம் நடத்திய சம்பவத்தாலும் முக்கூடலில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com