பாதாமி தொகுதியில் சித்தராமையா இன்று மனு தாக்கல்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பாதாமி தொகுதியில் சித்தராமையா இன்று(செவ்வாய்க்கிழமை) மனு தாக்கல் செய்கிறார்.
பாதாமி தொகுதியில் சித்தராமையா இன்று மனு தாக்கல்
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன்(செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. இந்த தேர்தலில் முதல்-மந்திரி சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவர் மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட ஏற்கனவே மனு தாக்கல் செய்துவிட்டார். இந்த நிலையில் சித்தராமையா பாதாமி தொகுதியில் போட்டியிட 23-ந் தேதி(அதாவது நேற்று) வேட்புமனு தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த திட்டம் திடீரென மாற்றப்பட்டது. அவர் கடைசி நாளான இன்று பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதியில் பகல் 1 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

இன்று இரவு பாதாமியில் தங்கும் சித்தராமையா நாளை(புதன்கிழமை) பாதாமி தொகுதியில் பிரசாரம் நடத்துவார் என்று தெரிகிறது. பா.ஜனதா சார்பில் இதுவரை அந்த தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அக்கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக விளங்குபவரான ரெட்டி சகோதரர்களின் நெருங்கிய நண்பர் ஸ்ரீராமுலு, பாதாமி தொகுதியில் இன்று பகல் 12 மணி அளவில் மனு தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது. சித்தராமையா போட்டியிடுவதால் பாதாமி தொகுதி கர்நாடகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com