

பெங்களூரு,
ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கர்நாடக அரசின் பஞ்சாயத்துராஜ் மற்றும் கிராம வளர்ச்சி துறைக்கு சொந்தமான ரூ.50 கோடி மங்களூருவில் உள்ள ஒரு வங்கிக்கு மாற்றம் செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்டு மாதம் இந்த பண பரிமாற்றம் நடந்துள்ளது. பின்னர் அந்த பணம் வெவ்வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இவை அனைத்தும் போலி கணக்குகள் ஆகும். இவை தற்போது நடைமுறையில் இல்லாத கணக்குகள்.
இந்த அரசு பணத்தை தேர்தல் செலவுக்கு பயன்படுத்த சித்தராமையா திட்டமிட்டுள்ளார். இவ்வாறு அரசு பணத்தில் தேர்தலை சந்திக்க சித்தராமையா தயாராகி இருப்பது நியாயமா?. இது தான் அவருடைய பாரபட்சமற்ற ஆட்சி நிர்வாகமா?. நான் கூறி இருப்பது ஒரு சிறிய உதாரணம் தான். இதுபோன்று இன்னும் அதிகமான முறைகேடுகள் நடந்துள்ளன. விவசாய கடனை சித்தராமையா ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டார். அந்த பணத்தை கூட்டுறவு வங்கிகளுக்கு இந்த அரசு இன்னும் வழங்கவில்லை.
மந்திரி எச்.கே.பட்டீல் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. பண பரிமாற்றம் பற்றி அவருக்கு தகவல் தெரியுமா? என்பது எனக்கு தெரியவில்லை. இதற்கு முன்பு பா.ஜனதா ஆட்சியிலும் இதுபோன்ற பண பரிமாற்றங்கள் நடைபெற்றன. மண்டியா நகரசபையில் ரூ.5 கோடி, ராமநகர் நகரசபையில் ரூ.15 கோடி இதே போல் முறைகேடு செய்யப்பட்டன. இந்த பணம் எங்கு போனது என்பதை கண்டறியும் பணி இதுவரை நடக்கவில்லை. இதுபோன்ற வங்கி பரிமாற்றங்கள் அனுப்பப்படும் பணம் தேர்தலுக்காக பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.