

முற்றுகை
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் ஆரம்பாக்கம் தோக்கமூர் கிராமத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
நாங்கள் அனைவரும் கும்மிடிப்பூண்டி வட்டம் ஆரம்பாக்கம் தோக்கமூர் கிராமத்தில் காலம் காலமாக வசித்து வருகிறோம்.
இந்த பகுதியில் ஒரே வீட்டில் 2, 3 குடும்பங்களுடன் நெருக்கடியுடன் வசித்து வருகிறோம். எங்களுக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கடந்த 20 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம். ஆனால் இதுநாள் வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து நாங்கள் அனைவரும் இட நெருக்கடியில் குழந்தைகளுடன் வறுமையில் வசித்து வருகிறோம். எனவே எங்களுக்கு நிரந்தர தீர்வு கண்டு இலவச வீட்டுமனை பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் முறையிட வந்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புகார் மனு
பின்னர் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி நீலவானத்து நிலவன் தலைமையில், கிராம ஒருங்கிணைப்பு நிர்வாகிகள் சங்கர், ராஜவேல், பழனி, பரந்தாமன், மூர்த்தி, வினோத், சேகர் ஆகியோர் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.