நசரத்பேட்டை, வால்காடு பகுதிகளில் மதுக்கடைகளை மூடக்கோரி முற்றுகை

நசரத்பேட்டை, வால்காடு பகுதிகளில் மதுக் கடைகளை மூடக்கோரி முற்றுகை போராட்டம் நடந்தது.
நசரத்பேட்டை, வால்காடு பகுதிகளில் மதுக்கடைகளை மூடக்கோரி முற்றுகை
Published on

பூந்தமல்லி

திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் சாலையோரம் புதிதாக மதுக்டை திறக்கப்பட்டது. இந்த மதுக்கடையை மூடக்கோரி பா.ம.க சார்பில் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்:-

இந்த சாலை செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் முக்கிய சாலை. இங்கு மதுக்கடை அமைக்கப்பட்டால் மது பிரியர்கள் சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் அமர்ந்து மது அருந்துவார்கள். இதனால் அந்த இடம் குப்பை மேடாக மாறி விடும். அதுமட்டுமல்லாமல் குடியிருப்புகள் மிகுந்த பகுதி என்பதால் குற்றச்சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறும். எனவே இந்த மதுக்டையை உடனே மூட வேண்டும். இல்லை என்றால் இந்த மதுக் கடையை மூடும் வரை பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆர்ப்பாட்டக்காரர்களிடம் நசரத்பேட்டை போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வால்காடு பகுதி

காஞ்சீபுரம் மாவட்டம் சித்தாமூரை அடுத்த வால்காடு பகுதியில் புதிதாக நேற்று முன்தினம் மதுக்கடை திறக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சித்தாமூர், வால்காடு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள், பள்ளி மாணவ- மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் அந்த கடையை முற்றுகையிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த சித்தாமூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன், ஞானசேகரன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களின் எதிர்ப்பை மீறி கடையை திறக்க மாட்டோம் என்று வாக்குறுதி அளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com