ஆடல், பாடல் நடத்தும் நிதியில் நீர்நிலைகளை தூர்வார திட்டம் - கிராம மக்கள் தீர்மானம்

சேதுபாவாசத்திரம் அருகே 3 ஆண்டுகளுக்கு ஊர் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு செய்யும் செலவை நிறுத்தி, அதற்கு பதிலாக அந்த நிதியை கிராமத்தில் உள்ள நீர்நிலைகள் மேம்பாட்டிற்கு பயன்படுத்துவது என கிராம மக்கள் ஒன்றிணைந்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
ஆடல், பாடல் நடத்தும் நிதியில் நீர்நிலைகளை தூர்வார திட்டம் - கிராம மக்கள் தீர்மானம்
Published on

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள நாடியம் கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தின் வளர்ச்சியை மீட்டெடுக்க வேண்டும் என இளைஞர்கள் முடிவெடுத்து சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் வேலை செய்து வரும் அந்த ஊரைச் சேர்ந்தவர்களுக்கு தகவல் கொடுத்து கிராமத்திற்கு வரவழைத்தனர்.

இதையடுத்து கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் அனைவரும் ஒன்று கூடினர். அங்கு ஊர்க்கூட்டம் நடந்தது. அவர்களில் ஒருவராக அந்த கிராமத்தை சேர்ந்தவரும், கடலூர் மாவட்ட கலெக்டருமான அன்புச்செல்வனும் இளைஞர்களின் அழைப்பை ஏற்று வந்திருந்தார்.

கூட்டத்தில், கிராமத்தின் வளர்ச்சிக்காக என்ன செய்வது என அனைவரிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன. அதில், கிராமத்தின் வளர்ச்சிக்காக முதலில் விவசாயத்திற்கும், குடிக்கவும் தண்ணீர் வேண்டும். அதற்காக ஊரில் உள்ள 340 ஏக்கர் பரப்பளவு கொண்ட நாடியம் பெரிய ஏரியையும் மற்றும் 100 ஏக்கர் பரப்பளவுள்ள 2 ஏரிகளையும், 7 குட்டைகளையும் மீட்டு தூர்வார வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

மேலும் நாடியம் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். அதற்கு தேவையான கட்டமைப்பு பணிகளை செய்ய வேண்டும். அத்துடன் ஆங்கில வழிக்கல்வியை கொண்டு வர நபார்டு வங்கி உதவியை நாட வேண்டும். கிராமத்திற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளை 3 ஆண்டுகளில் செய்து முடிக்க வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

இதற்கான நிதி ஆதாரமாக, முத்துமாரியம்மன் கோவிலில் 10 நாட்கள் நடக்கும் திருவிழாவின்போது நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு அதற்கான தொகையை கொண்டு நீர்நிலை, பள்ளி, கிராம வளர்ச்சிக்காக செலவிட வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டன. இறுதியாக இளைஞர்களை சீரழிக்கும் டாஸ்மாக் மதுக்கடையை நாடியம் ஊராட்சி எல்லைக்குள் எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க கூடாது எனவும் தீர்மானங்களை நிறைவேற்றினர்.

இதற்கு கிராம மக்கள் அனைவரும் ஒரே குரலில் சம்மதம் தெரிவித்தனர். தீர்மானத்துடன் நின்றுவிடக்கூடாது என்பதால் முதல்கட்டமாக வருகிற 10-ந் தேதி முதல் நீர்நிலை சீரமைப்பு பணிகளை தொடங்க உள்ளனர். நாடியம் கிராம இளைஞர்களின் இந்த தீர்மானம் அருகில் உள்ள கிராமங்களுக்கும் பரவியதால் அவர்களும் கிராம கூட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com