சீர்காழியில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை: சேலம் கோர்ட்டில் 3 பேர் சரண்

சீர்காழி அருகே அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கு சம்பந்தமாக சேலம் கோர்ட்டில் நேற்று 3 பேர் சரண் அடைந்தனர்.
சீர்காழியில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை: சேலம் கோர்ட்டில் 3 பேர் சரண்
Published on

சேலம்,

நாகை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 47). தொழில் அதிபரான இவர், கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க. மாணவர் அணி துணை செயலாளராகவும், முதல்நிலை ஒப்பந்தக்காரராகவும் இருந்து வந்தார். சீர்காழி தென்பாதி திரிபுரசுந்தரி நகரில் கட்டியுள்ள வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரமேஷ்பாபு, சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் உள்ள தனியார் பஸ் அதிபர் ஒருவரின் வீட்டிற்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காரை டிரைவர் இளவரசன் (25) என்பவர் ஓட்டினார்.

அப்போது, ரமேஷ்பாபுவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. இதையடுத்து அவர் செல்போனை எடுத்து பேசிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் திடீரென நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் ரமேஷ்பாபுவை கொலை செய்தனர். பின்னர், கொலையாளிகள் அங்கிருந்து கார், மோட்டார் சைக்கிள்களில் தப்பிச்சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்தநிலையில், அ.தி.மு.க. பிரமுகர் ரமேஷ்பாபு கொலையில் தொடர்புடைய 3 பேர் நேற்று மதியம் சேலம் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர். இவர்கள், நாகை மாவட்டம் சீர்காழி மதுத்துறை பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் பார்த்திபன் (28), திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த பாலு மகன் அருண்பிரபு (34), புதுச்சேரி மேல்காத்தமங்கலம் தேனீநகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரேம்குமார் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் வருகிற 1-ந் தேதி வரை சேலம் மத்திய சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு சிவா உத்தரவிட்டார். அதன்படி 3 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com