சித்தராமையா மீது நிலமுறைகேடு வழக்கு? கவர்னருடன் மத்திய மந்திரி சந்திப்பு

கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலாவை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் சந்தித்து பேசினார். அப்போது சித்தராமையா மீது நிலமுறைகேடு வழக்கு தொடர அனுமதி அளிப்பது தொடர்பாக அவர்கள் ஆலோசித்ததாக தகவல் வெளியானது.
சித்தராமையா மீது நிலமுறைகேடு வழக்கு? கவர்னருடன் மத்திய மந்திரி சந்திப்பு
Published on

பெங்களூரு,

கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜனதா பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் புட்டசாமி எம்.எல்.சி. மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து பேசினர்.

அப்போது பெங்களூரு பூபசந்திராவில் அரசு நிலத்தை விடுவித்ததில் முறைகேடு நடந்து இருப்பதாகவும், அதுதொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்கக் கோரியும் அவர்கள் மனு கொடுத்தனர். இதுகுறித்து கவர்னர் ஆய்வு செய்து வருகிறார். சட்ட நிபுணர்களின் ஆலோசனையையும் அவர் கேட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கவர்னர் வஜூபாய் வாலாவை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு சென்றதாக தகவல்கள் வெளியாயின. முதல்-மந்திரி மீது நில முறைகேடு வழக்கு தொடர அனுமதி வழங்குவது குறித்து அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்குவதால் சித்தராமையா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் பிரதமர் மோடி, எடியூரப்பா, அமித்ஷா ஆகியோருக்கு எதிராக கடுமையாக தாக்கி பேசி வருகிறார். அவருக்கு கடிவாளம் போடும் வகையிலும் சித்தராமையாவை நில முறைகேடு வழக்கில் சிக்க வைக்கவும் பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வழக்கு தொடர அனுமதி வழங்குவதன் மூலம் சித்தராமையாவுக்கு நெருக்கடி கொடுக்க பா.ஜனதா தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது. ஒருவேளை சித்தராமையா மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி வழங்கினால், அது கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த நிலையில் காங்கிரசை சேர்ந்த உக்ரப்பா எம்.எல்.சி. கூறுகையில், அரசியல் சாசனத்தை காப்பதாக மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள் பதவிப்பிரமாணம் எடுக்கிறார்கள். ஆனால் மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே அரசியல் சாசனத்திற்கு எதிராக பேசுகிறார். ராஜ்பவனை தவறாக பயன்படுத்த பா.ஜனதா முயற்சி செய்கிறது. சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்குமாறு பா.ஜனதா மனு கொடுத்துள்ளது. பா.ஜனதாவினரின் அழுத்தத்திற்கு கவர்னர் பணியக்கூடாது. சித்தராமையா மீது கூறப்பட்டுள்ள புகார் அடிப்படை ஆதாரமற்றது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com