சிவகங்கையில் வக்கீல்கள் மறியல் போராட்டம்

சிவகங்கை மாவட்ட கோர்ட்டு வளாக சாலையை சீரமைக்கக்கோரி வக்கீல்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கையில் வக்கீல்கள் மறியல் போராட்டம்
Published on

சிவகங்கை,

சிவகங்கை திருப்பத்தூர் ரோட்டில் மாவட்ட கோர்ட்டு உள்ளது. திருப்பத்தூர் ரோட்டில் இருந்து கோர்ட்டு வளாகத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையை சீரமைத்து தரவேண்டும் என்று சிவகங்கை வக்கீல்கள் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் சாலையை சீரமைக்கவில்லை என்றால் மறியல் போராட்டம் நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் சாலை சீரமைக்கப்படவில்லை.

இந்தநிலையில் சாலை சீரமைக்கப்படாததை கண்டித்து நேற்று காலை கோர்ட்டு வளாகத்தில் இருந்து வக்கீல்கள் சங்க தலைவர் பழனிச்சாமி, செயலாளர் தங்கப்பாண்டியன், பொருளாளர் வசந்தகுமார், இணைச் செயலாளர் இளையராஜா மற்றும் வக்கீல்கள் ஜானகிராமன், ராஜசேகரன், தீபன் சக்கரவர்த்தி, சுந்தரநடராஜன், வல்மீகிநாதன், ராம்பிரபாகர் உள்பட ஏராளமான வக்கீல்கள் சிவகங்கை பஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் சிவகங்கை பஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு மங்களேசுவரன், கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட வக்கீல்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சாலை அமைப்பது தொடர்பாக உரிய அதிகாரிகள் வந்து உறுதியளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் எல்லிசைசெல்வி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜஹாங்கீர் ஆகியோர் அங்கு வந்து, இன்னும் 15 நாட்களில் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக எழுத்து மூலம் உறுதி தெரிவித்தனர். அதன்பின்னரே வக்கீல்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவாக முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கந்தசாமி, காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன், ம.தி.மு.க. நகர் செயலாளர் சுந்தரபாண்டியன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com