தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் சிவகாசி மாணவிக்கு தங்கம்

கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் சிவகாசி மாணவி நாகமுத்துமாரி தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் சிவகாசி மாணவிக்கு தங்கம்
Published on

சிவகாசி,

கோவாவில் கடந்த வாரம் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழகத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்று வந்தனர்.

இந்த குழுவில் சிவகாசி அய்ய நாடார்-ஜானகி அம்மாள் கல்லூரியில் பி.எஸ்சி. படிக்கும் மாணவி நாகமுத்துமாரி கலந்து கொண்டு எறிபந்து விளையாட்டில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பேட்டி

இதுகுறித்து மாணவி நாகமுத்துமாரி கூறியதாவது:-

சிவகாசி சபையர் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் போது விளையாட்டில் ஆர்வம் வந்தது. தொடர்ந்து 5 வருடங்களாக பல்வேறு இடங்களில் நடைபெற்ற மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று வருகிறேன். கடந்த வருடம் பூட்டானில் நடைபெற்ற எறிபந்து விளையாட்டில் பங்கு பெற்று தங்கம் வென்றேன்.

தற்போது கோவாவில் நடைபெற்ற எறிபந்து போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றுள்ளேன். போதிய பொருளாதார வசதி இல்லாமல் இருந்தாலும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாணிக்கம்தாகூர் எம்.பி., தொழிலதிபர்கள் சபையர் ஞானசேகரன், அரசன் அசோகன், ஸ்ரீராஜாசொக்கர், சன்சைன் கணேசன் ஆகியோர் செய்த உதவியால் தற்போது தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்று வருகிறேன்.

ஐ.ஏ.எஸ். படித்து சேவை

என்னை போன்ற ஏழை விளையாட்டு வீரர்களுக்கு போட்டியில் கலந்து கொள்ள ஆகும் செலவுகளை அரசே ஏற்றுக்கொண்டால் மேலும் சாதிக்க வசதியாக இருக்கும்.

தற்போது கல்லூரி படித்து வரும் நான் ஐ.ஏ.எஸ். படித்து ஏழை மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது நாகமுத்துமாரியின் தந்தை முத்துமணி, தாய் தேவி, சகோதரி சந்தியா, தம்பி நாகமணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com