

தேனி
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வேளாண்மைத்துறையின் சார்பில் பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்து வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, புள்ளியியல் துறை அலுவலர்கள், வங்கி அலுவலர்கள் மற்றும் பொது சேவை மைய பணியாளர்களுக்கான மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடந்தது. மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.
மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வேளாண் தொழிலை மேம்படுத்திடவும், முன்னேற்றம் அடையச் செய்திடவும் எண்ணற்ற வேளாண் சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் நோக்கம் இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் உற்பத்தி பாதிப்பு, வருவாய் இழப்பு போன்றவற்றை ஈடு செய்வதற்காகவும், வேளாண் தொழிலை நலிவடையாமல் பாதுகாத்திடவும் பயிர் காப்பீட்டுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம் வேளாண் தொழிலை பிரதானமாக கொண்டும், அதனை அடிப்படையாகக் கொண்டு பிற தொழில்களும் நடைபெற்று வருகிறது. இயற்கை மாற்றத்தினால் வேளாண் தொழில்கள் பாதிப்படையும் பொழுது பிற தொழில்களும் உடன் சேர்ந்து பாதிப்புக்குள்ளாகிறது. வேளாண் தொழிலை பாதுகாப்பது அனைவரின் முக்கிய பங்காகும்.
துறை அலுவலர்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் நலத்திட்டங்களை நன்கு தெரிந்து கொள்ளுவதன் மூலம் அத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட முடியும். உரிய நேரத்தில் தகுதியான நபர்களுக்கு உரிய பயன்களை வழங்குவதுதான் ஒரு திட்டத்தின் வெற்றியாகும். அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து அரசுப்பணிகளை மேற்கொள்ளுவதன் மூலமும், ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு தேவையான தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வதன் மூலமும் தகுதியான நபர்களுக்கு அரசின் நலத்திட்டங்களை உரிய காலத்தில் விரைந்து வழங்கிட முடியும்.
விவசாயிகள் ஆக்கத்துடனும், ஊக்கத்துடனும் வேளாண் தொழிலை மேற்கொள்ளவும், வேளாண் பெருங்குடி மக்களுக்கு பயிர் காப்பீடு தொகை உரிய நேரத்தில் சென்றடையவும் வேளாண்மைத்துறை மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.