சேலத்தில் சுதந்திர தினவிழா கோலாகலம்: கலெக்டர் சம்பத் தேசிய கொடி ஏற்றினார்

சேலத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் கலெக்டர் சம்பத் தேசிய கொடி ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் நடந்த மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது.
சேலத்தில் சுதந்திர தினவிழா கோலாகலம்: கலெக்டர் சம்பத் தேசிய கொடி ஏற்றினார்
Published on

சேலம்,

நாடு முழுவதும் சுதந்திர தினவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி, சேலத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விழாவில் கலந்து கொள்வதற்காக கலெக்டர் சம்பத், காலை 8.25 மணிக்கு காந்தி மைதானத்திற்கு காரில் வந்தார்.

அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் காந்தி மைதானத்தின் மையப்பகுதியில் 8.30 மணிக்கு கலெக்டர் சம்பத் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது போலீஸ் பேண்டு வாத்திய குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர்.

அதைத்தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் புறாக்களும், வண்ண, வண்ண பலூன்களும் பறக்கவிடப்பட்டன. தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பை திறந்தவெளி ஜீப்பில் சென்றவாறு கலெக்டர் சம்பத் பார்வையிட்டார். அவருடன் போலீஸ் சூப்பிரண்டு ராஜனும் உடன் சென்றார்.

தொடர்ந்து பேண்டு வாத்தியம் முழங்க மாவட்ட ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் போலீசார் அணிவகுப்பு நடத்தினர். மேலும் என்.சி.சி. மாணவர்களும் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். அதை கலெக்டர் ஏற்றுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி மைதான வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சாமியானா பந்தலில் நடைபெற்றது. சுதந்திர போராட்ட தியாகிகளை கலெக்டர் பொன்னாடை அணிவித்து கவுரவித்ததுடன் நினைவு பரிசுகளையும் வழங்கினார். அப்போது சேலம் மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் வாரிசுகள் சங்கம் சார்பில் கலெக்டரிடம் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அதில், சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகள் குறை தீர்க்கும் கூட்டம் 3 மாதத்திற்கு ஒருமுறை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதன் பிறகு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தாட்கோ, வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் 11 பயனாளிக்கு ரூ.10 லட்சத்து 56 ஆயிரத்து 643 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சம்பத் வழங்கினார்.

தொடர்ந்து சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மொத்தம் 183 அரசு அலுவலர்கள் மற்றும் போலீசாருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் தேசிய ஒருமைப்பாடு நடனம், புனித சூசையப்பர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் நாட்டுப்புற பாடல் நடனம், ஸ்ரீ சாரதா வித்யாலயா மகளிர் மேல் நிலைப்பள்ளி மாணவிகளின் பரத நாட்டியம், மேட்டூர் மால்கோ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நடனம், தாரமங்கலம் மற்றும் நங்கவள்ளி கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா அரசு உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டுப்பற்று பாடல் நடனம், அழகாபுரம் ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் தேசபக்தி பாடல் நடனம் ஆகியவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக செயின்ட் பால் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேசப்பற்று பாடலுக்கு நடனம் ஆடியதுடன் பிரமீடு அமைத்து மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் புகைப்படத்தை காண்பித்த காட்சி அனைவரின் பாராட்டையும் பெற்றது. மொத்தம் 7 பள்ளிகளை சேர்ந்த 945 மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த விழாவில் சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், போலீஸ் துணை கமிஷனர்கள் சுப்புலட்சுமி, ராமகிருஷ்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) விஜய்பாபு, மாவட்ட விளையாட்டு அலுவலர் கனகராஜ், சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக காந்தி மைதானத்திற்கு வந்த பொதுமக்கள், அதிகாரிகள் அனைவரும் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com