சிறிய அளவிலான கண்ணி வலைகளை மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது - கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவிப்பு

குமரி மாவட்டத்தில் சிறிய அளவிலான கண்ணி வலைகளை மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவித்துள்ளார்.
சிறிய அளவிலான கண்ணி வலைகளை மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது - கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவிப்பு
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் சிறிய அளவிலான கண்ணி வலைகளை மீன்பிடிக்க பயன்படுத்துவது தொடர்பாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கும் பருவ காலம், மீன்கள் பிடிக்கப்படும் நேரம், பிடிக்கப்படும் மீன் வகைகளுக்கேற்றவாறு பல்வேறு வகையான செவிள் வலைகளை பயன்படுத்தி வருகின்றனர். இவ்விதமாக மீனவர்கள் பயன்படுத்தும் வலைகளில் மோனோபிலமென்ட் நாரிழையால் உருவாக்கப்பட்ட சிறிய கண்ணி அளவு கொண்ட (90 மி.மீ.க்கு குறைவான கண்ணி அளவு கொண்ட) மூன்றடுக்கு வலைகள் பயன்படுத்தும் போது சிறிய மீன்கள், முட்டைகள், பவளப்பாறைகள், கடல் பஞ்சு மற்றும் மீன்களுக்கு உணவாகவும் அவற்றின் இனப்பெருக்கத்திற்காகவும் பயன்படும் பாசியினங்கள் ஆகிய அனைத்தும் இந்த வலையினால் சேதப்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக கணவாய் மற்றும் கல் இறால் ஆகிய மீன் இன வகைகள் மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களை இனப்பெருக்க காலமாக கொண்டுள்ள இம்முக்கிய பருவ காலத்தில் இந்த வலைகள் கடற்கரை ஓரத்தில் பயன்படுத்தும் போது மேற்கண்ட இனங்களின் முட்டைகள், குஞ்சு மீன்கள் அழிக்கப்பட்டு மீன்வளம் மொத்தமாக அழியும் நிலை ஏற்படும்.

மாவட்ட அளவிலான மீன்வள கூட்டு மேலாண்மை குழு கூட்டத்தில் 90 மி.மீ. கண்ணி அளவிற்கு குறைவான அடிமட்ட செவிள் வலைகள் கல் இறால் மீன்பிடிப்பிற்கு பயன்படுத்தக்கூடாது என்ற தீர்மானமும், மே, ஜூன், ஜூலை மாதங்களில் கல் இறால்களை வலைகள் வைத்து பிடிக்கக்கூடாது என்ற தீர்மானமும் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் அறிவிப்பாணையின்படி, மாவட்ட அளவில் இரு தரப்பு மீனவர்களுக்கிடையே மீன்பிடிப்பதில் பிரச்சினைகள் எழும்போது அது குறித்து தீர்வு காண்பதற்காக கலெக்டரை தலைவராகக் கொண்ட குழு அமைத்திடவும், இந்த குழுவின் பரிசீலனையின் அடிப்படையில் கலெக்டர் முன்னிலையில் எடுக்கப்படும் தீர்மானங்களைக் கொண்டு பிரச்சினைகளை தவிர்க்கவும் வழிவகுக்கப்பட்டுள்ளது.

எனவே மேற்கூறப்பட்ட இந்த தகவல் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான குழு கூட்டப்பட உள்ளது. ஆகையால் இக்குழுவின் பரிசீலனை வெளியிடப்படும் வரை சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை தவிர்க்கும் வண்ணமாக காச்சாமூச்சா வலை எனப்படும் மூன்றடுக்கு செவிள் வலைகளை குமரி மாவட்டத்தில் எப்பகுதியிலும் மீன்பிடிக்க பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com