

தூத்துக்குடி:
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை 1,037 பேரிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது.
துப்பாக்கி சூடு
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
ஏற்கனவே நடந்த 33 கட்ட விசாரணையில் 1031 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
34-வது கட்ட விசாரணை
இதனை தொடர்ந்து 34-வது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் கடந்த 27-ந் தேதி தொடங்கியது. ஆணைய விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் இந்த விசாரணை நடைபெற்றது.
இதில் நேற்று முன்தினம், துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக பணியாற்றிய வெங்கடேஷ் ஒருநபர் ஆணையம் முன்பு ஆஜரானார். அவரிடம் காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை 9 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பல்வேறு விளக்கங்களை ஆணைய அதிகாரி விசாரித்து பதிவு செய்தார்.
நேற்று 4-வது நாள் விசாரணை நடந்தது. இதில் துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது உதவி கலெக்டராக இருந்த பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த வீரப்பன் ஆகியேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
1,037 பேரிடம்...
இதுகுறித்து ஒருநபர் ஆணைய வக்கீல் அருள்வடிவேல் சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
34-வது கட்ட விசாரணை முடிந்து உள்ளது. இதுவரை மொத்தம் 1,417 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. இதில் 1,037 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்து உள்ளனர். இதுவரை 1,483 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளன. அடுத்த கட்ட விசாரணை அடுத்த மாதம் (ஜனவரி) 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது போலீஸ் சூப்பிரண்டாக இருந்த மகேந்திரன், நெல்லை சரக டி.ஐ.ஜி., தென்மண்டல ஐ.ஜி. உள்ளிட்ட முக்கிய சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இனிமேல் வரக்கூடிய சாட்சிகளிடம் விசாரிப்பதற்கு நீண்ட நேரம் ஆகலாம். ஏற்கனவே சம்மன் அனுப்பி வராதவர்கள் அவசியம் ஏற்பட்டால் மட்டும் மீண்டும் அழைக்கப்படுவார்கள். ஆணையத்தின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.