3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டெடுப்பு கீழடி போல் ஆய்வு நடத்த சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்

கீரமங்கலம் அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடி போல் ஆய்வு நடத்த சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டெடுப்பு கீழடி போல் ஆய்வு நடத்த சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்
Published on

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே மங்களநாடு-பாலகிருஷ்ணபுரம் ஆகிய கிராமங்களுக்கிடையே வில்லுனி ஆற்றங்கரையோர பகுதியில் உள்ள அம்பலத்தான் மேடு என்ற இடத்தில் மிகப்பழமையான வாழிடம் உள்ளது. இவ்விடம் குறித்த தகவலை தினத்தந்தி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே (3.10.2004) கட்டுரையாக வெளியிட்டது. இதையடுத்து அப்போது புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன் தலைமையில், சமூக ஆர்வலர் மதியழகன், தொல்லியல் ஆய்வாளர் மேலப்பனையூர் கரு.ராஜேந்திரன், தொல்லியல் ஆய்வுக்கழக உறுப்பினர் ஆசிரியர் கஸ்தூரிரங்கன், தலைமை ஆசிரியர் வீரசந்திரசேகரன், ஆசிரியர் இளையராஜா ஆகியோர் அடங்கிய குழுக்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

3 ஆயிரம் ஆண்டுகள் பழமை

அங்கு ஆங்காங்கே கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் கிடந்தன. சுண்ணாம்பு கற்காரைகள் படிந்த இடங்களிலும், புதர்களின் அருகிலும் முதுமக்கள் தாழிகள் புதைந்து கிடந்தன. மேலும் அங்கு கிடந்த பானை ஓடுகளில் முக்கோண ஏணி வடிவத்திலான குறியீடுகளும் காணப்பட்டது. இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது:- வன்னி மரங்கள் அதிகமாக காணப்படுவதால் இந்த பகுதி போர்வீரர்களின் வாழ்விடமாகவும், போரில் மடிந்த வீரர்களின் நினைவிடங்களாகவும் இருந்திருக்க வேண்டும். மேலும் புதிர் திட்டைகளும் அமைந்திருக்கிறது. சுண்ணாம்பு படிமங்கள் காணப்படுகிறது. இதன் காலம் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இருக்க வேண்டும் என்றனர். மேலும் இந்த பானை ஓடுகளில் உள்ள குறியீடுகள் கிரேக்கம், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளிலும் ஒரே மாதிரியாக கிடைத்திருப்பதால் தமிழர்கள் உலகமெங்கும் வாழ்ந்த சமூகமாக இருந்திருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது என்றனர்.

பானைக்குறியீடுகள் சொல்ல வருவது என்ன?

மேலும் அவர்கள் கூறுகையில், மனித உணர்வுகளை வெளிப்படுத்தவும், தமது செய்தியை யாருக்காவது தெரியப்படுத்த வேண்டும் என்ற சமூக வழிகாட்டுதலில், அக்காலத்தில் நடைமுறையில் இருந்த எழுத்துக்களை பயன்படுத்தி, பானை ஓடுகளில் எழுதி வைத்துள்ளதை நாம் கீறல்கள் என்கிறோம். இந்தக்குறியீடுகளில் குறிப்பிட்டுள்ள தலைகீழ் சூலம் போன்ற அமைப்பு போர்த்திறமிக்கவர், புதைக்கப்பட்டுள்ளார் என்பதை குறிப்பதாக கிரேக்கம் சார்ந்த தொல்லியலாளர்களின் கருத்தாக உள்ளது. இதனை உலகளாவிய மொழிக்குறியீடாகவே பார்க்க வேண்டியுள்ளது. இந்த குறியீட்டு எழுத்துகள், எழுத்து தோன்றுவதற்கு முன்பே பயன்பாட்டில் இருந்தவை என்பதால், இந்த பானை ஓடுகள் 3,500 ஆண்டுகள் பழமையானது என கருத வேண்டியுள்ளது, என்றனர்.

சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேம்பட்ட சமூகம் வாழ்ந்திருக்கிற சான்றுகள் கிடைத்திருப்பது பெருமைமிக்கதாக உள்ளது. கீழடிக்கு இணையாக ஒரு வரலாற்று சான்றுகள் அம்பலத்திடலில் புதைந்து கிடக்கின்றன. எனவே மத்திய, மாநில அரசுகள் தொல்லியல் துறை மூலம் ஆய்வுகள் மேற்கொண்டால், தமிழர்களின் வரலாற்றை மேலும் அறியலாம் என ஆய்வாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com