

புதுக்கோட்டை,
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அருகே புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகம், உதவி திட்ட இயக்குனர்கள் அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. இங்கு 25-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. மேலும் பல பகுதியில் மேற்கூரையில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் தெரியும் நிலையில் உள்ளது. மேலும் பலத்த காற்று வீசும்போது சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. இதனால் இந்த அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தலைமையிடமாக உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியங் களில் உள்ள முக்கியமான ஆவணங்கள் அனைத்தும் இங்கு வைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. மழை பெய்யும்போது மழைநீர் உள்ளே புகுந்து ஆவணங்கள் மழைநீரில் நனைந்து சேதமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும் இந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இந்த அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு உள்ள கழிவறையில் தேவையில்லாத பொருட்களை போட்டு வைக்கும் அறையாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே இது குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் இடிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்துவதற்கு முன்பு பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.