அதானியில் துணை-முதல் மந்திரி நிகழ்ச்சியில் காற்றில் பறந்த சமூக இடைவெளி - பொதுமக்கள் கடும் அதிருப்தி

அதானியில் துணை முதல்-மந்திரி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சமூக இடைவெளி காற்றில் பறந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
அதானியில் துணை-முதல் மந்திரி நிகழ்ச்சியில் காற்றில் பறந்த சமூக இடைவெளி - பொதுமக்கள் கடும் அதிருப்தி
Published on

பெலகாவி,

கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 50 பேர் தான் கலந்து கொள்ள வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும் கோவில் திருவிழாக்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் அரசின் இந்த உத்தரவை மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மீறுவது வாடிக்கையாகி விட்டது. இதனால் மக்கள் பிரதிநிதிகள் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். இந்த நிலையில் மந்திரிகள் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் சமூக இடைவெளி காற்றில் பறந்து உள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

பெலகாவி மாவட்டம் அதானியில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் கர்நாடக துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி, மந்திரி ஸ்ரீமந்த் பட்டீல், எம்.எல்.ஏ.க்கள் மகேஷ் குமட்டள்ளி, ராஜூ கார்கே உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-மந்திரி, மந்திரி, எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் என 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பெரும்பாலோனார் முகக்கவசம் அணிந்து இருந்தாலும், யாரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை. இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் அங்கு சமூக இடைவெளி அங்கு காற்றில் பறந்தது. இதுதொடர்பாக வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த வீடியோவை பார்த்தவர்கள் அரசின் உத்தரவு எல்லாம் சாதாரண பொதுமக்களுக்கு தானா? மக்கள் பிரதிநிதிகளுக்கு எல்லாம் பொருந்தாதா? என்று தங்களின் கருத்தை பதிவிட்டு உள்ளனர். மேலும் அதானி பகுதியில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறி பொதுமக்கள் தங்களது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com