காற்றில் பறந்த சமூக இடைவெளி: மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்

புதுவையில் சமூக இடைவெளியை கடைபிடிக் காமல் நேற்று மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதைப்பார்த்து போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
காற்றில் பறந்த சமூக இடைவெளி: மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்
Published on

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் இந்துக்கள் பெரும்பாலானோர் அசைவத்தில் இருந்து சைவ உணவுகளுக்கு மாறி உள்ளனர். இதனால் புதுவை இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டத்தை காணவில்லை. ஒரு சிலர் மட்டுமே வந்து இருந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர். புதுவையில் நேற்று ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.700-க்கும், சிக்கன் ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நெல்லித்தோப்பு மார்க்கெட், உப்பளம் சாலையில் மீன்கள் விற்பனை செய்யும் இடங்களில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. குபேர் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் வழக்கம்போல் இருந்தது.

புதுச்சேரி நெல்லித்தோப்பு மார்க்கெட், புதிய பஸ் நிலையத்தில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட், உழவர்சந்தை உள்ளிட்ட இடங்களில் வழக் கத்தை விட நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக அலைமோதியது. சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு காய்கறி, பழங்களை அவர்கள் வாங்கிச் செல்வதை காண முடிந்தது.

இதைப்பார்த்து அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பொதுமக்களை ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர். முகக்கவசம் அணிவதுடன் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com