

விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.
வடமாநிலங்களில் இருந்து குழந்தைகளை கடத்தும் கும்பல் தமிழகத்தில் ஊடுருவி உள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவு மற்றும் வாசகங்கள் பரவி வருகிறது. அது முற்றிலும் வதந்தி. பொதுமக்கள் யாரும் இதனை நம்ப வேண்டாம்.
இதுபோன்ற வதந்திகளை நம்பி பொதுமக்கள், தங்கள் பகுதிக்கு வரும் அடையாளம் தெரியாதவர்களையும், சந்தேக நபர்களையும் தாக்குவது அதிகரித்து வருகிறது. அதன் விளைவாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தங்கள் குலதெய்வ கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்தவர்கள் அங்கிருந்த குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்ததால், அவர்களை கடத்தல் கும்பல் என்று தவறுதலாக நினைத்து கிராம மக்கள் தாக்கியதில் சென்னையை சேர்ந்த ஒரு பெண் இறந்துள்ளார். அவருடன் காரில் வந்த 4 பேரும் தாக்குதலில் படுகாயம் அடைந்தனர்.