

ஸ்ரீபெரும்புதூர்,
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 26). எம்.பி.ஏ. பட்டதாரியான பாஸ்கர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணை இவர் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். பல இடங்களில் தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். இந்தநிலையில் பாஸ்கர் காதலியை சந்தேகப்பட ஆரம்பித்தார். இதனால் இளம்பெண் பாஸ்கரை சந்திப்பதையும், செல்போனில் பேசுவதையும் தவிர்த்து வந்தார். இந்தநிலையில் பாஸ்கர் காதலியை சந்தித்து ஏன் என்னை விட்டு விலகி செல்கிறாய் என்னை திருமணம் செய்ய போகிறாயா? இல்லையா? என்று கேட்டுள்ளார்.
உன்னை போன்று சந்தேக பேர்வழியை திருமணம் செய்ய முடியாது என்று கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கர் தானும் காதலியும் எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். மேலும் தன்னை திருமணம் செய்ய மறுத்தால் மேலும் புகைப்படங்களை வெளியிட்டு உன்னை அசிங்கப்படுத்துவேன் என்று மிரட்டியுள்ளார். இது குறித்து இளம்பெண் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரை கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார்.