பள்ளிக்கரணையில் 7 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் சமுதாய நலக்கூடம்

பள்ளிக்கரணையில் 7 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் சமுதாய நலக்கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பள்ளிக்கரணையில் 7 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் சமுதாய நலக்கூடம்
Published on

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை பேரூராட்சியாக இருந்தபோது கடந்த 2010-ம் ஆண்டு பள்ளிக்கரணை ஐ.ஐ.டி. காலனியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.17 லட்சம் செலவில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது.

அதன்பின்பு திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. பின்னர் பேரூராட்சி அலுவலகம் கட்டும் பணி நடந்து வந்ததால் கடந்த 2011-ம் ஆண்டு வரை இந்த சமுதாய நலக்கூடத்தில்தான் தற்காலிகமாக பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டது.

அதன்பின்பு இந்த சமுதாய நலக்கூடம் செயல்பாடு இல்லாமல் மூடப்பட்டது.

2011-ல் நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது பள்ளிக்கரணை பேரூராட்சி சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. பெருங்குடி மண்டலத்தில் 189-வது வட்டத்தில் தற்போது உள்ளது.

பேரூராட்சியாக இருந்தபோது கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டும் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் சமுதாய நலக்கூடத்தின் அருகில் பல இடங்களில் குடிநீர் மேல்நிலை தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன.

பொதுமக்களுக்காக கட்டப்பட்டு கடந்த 7 ஆண்டுகளாக செயல்படாமல் மூடிக்கிடக்கும் சமுதாய நலக்கூடம் திறக்கப்படாமல் இருப்பது பொதுமக்களை வேதனை அடைய செய்துள்ளது.

மூடிக்கிடக்கும் சமுதாய நலக்கூடம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். கூடிய விரைவில் சமுதாய நலக்கூடத்தை திறக்க மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஆனால் சமுதாய நலக்கூடத்தில் அடிப்படை வசதிகள் எதுவுமில்லை என்றும், அவற்றை சீரமைக்க உரிய டெண்டர் கோரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெருங்குடி மண்டல அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com